Reading Time: < 1 minute

கனடா பாரியளவில் பாதீட்டுப் பாற்றாக்குறையை எதிர்நோக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

2035ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)யின் 5 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்கு செலவிட, கனடாவின் பிரதமர் மார்க் கார்னி திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு பாதுகாப்பு செலவுகள் உயர்த்தப்பட்டால் மத்திய அரசின் பாதீட்டு பற்றாக்குறையை 63 பில்லியன் டாலராக உயர்த்தும் என பாராளுமன்ற செலவுக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

பாராளுமன்ற வரவு–செலவுத் திட்ட அலுவலர் (PBO) ஜேசன் ஜாக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

புதிய இலக்கை அடைவதற்காக பாதுகாப்புச் செலவுகளை படிப்படியாக உயர்த்துவது, ஆண்டுக்கு கூடுதலாக சுமார் 33.5 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தின்பேரில், நேட்டோ (NATO) உறுப்புநாடுகள் இராணுவச் செலவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டன.

குறிப்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5 சதவீதம் என்ற புதிய உயர்ந்த இலக்கை ஏற்றுக் கொண்டன.

கார்னி அரசின் முதல் மத்திய வரவு–செலவுத் திட்டம் கடந்த இலையுதிர்காலத்தில் வெளியிடப்பட்டபோது, “புதிய நேட்டோ செலவுத் இலக்கை அடைவதற்கான பாதையில் கனடாவை கொண்டு செல்லும்” என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பதற்கான கணிப்புகளுக்கு ஆதாரமான தரவுகளை அரசு வெளியிடவில்லை என ஜாக்ஸ் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.

அடுத்த ஒரு தசாப்த காலத்தில் பாதுகாப்புச் செலவுகளை அதிகரிப்பது, 2035ஆம் ஆண்டில் கனடாவின் மத்திய அரசின் கடன்–மொத்த தேசிய உற்பத்தி விகிதத்தை 6.3 சதவீத புள்ளிகளால் உயர்த்தும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.