Reading Time: < 1 minute

கனடாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு விதிகளை அந்நாட்டு அரசு முறைப்படுத்தியுள்ளது. 2026-ம் ஆண்டு நடைமுறையில் இருக்கும் இந்த மாற்றங்கள் குறித்த பார்ப்போம்.

Tamil Business Directory

கனடாவிற்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களின் முதன்மை நோக்கம் கல்வியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த, அந்நாட்டு அரசு வேலை நேரக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. யாரெல்லாம் வேலை செய்ய முடியும்? சர்வதேச மாணவர்கள் தனியாக வேலை அனுமதி (Work Permit) பெறத் தேவையில்லை, ஆனால் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

மாணவர் செல்லுபடியாகும் கல்வி அனுமதி (Study Permit) பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் (DLI) முழுநேர மாணவராக இருக்க வேண்டும். குறைந்தது 6 மாத கால அளவைக் கொண்ட பட்டய அல்லது பட்டப்படிப்பை மேற்கொள்பவராகவும், படிப்பைத் தொடங்கியவராகவும் இருக்க வேண்டும். வேலையைத் தொடங்கும் முன் சமூகக் காப்பீட்டு எண்ணிற்கு (SIN) விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர்கள் வாரத்திற்கு அதிகபட்சமாக 24 மணிநேரம் மட்டுமே வளாகத்திற்கு வெளியே வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோடைக் கால விடுமுறை, குளிர்கால விடுமுறை போன்ற அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களில் வரம்பற்ற மணிநேரம் வேலை செய்யலாம். மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவன வளாகத்திற்குள்ளே அல்லது அங்குள்ள வணிக நிறுவனங்களில் வேலை செய்ய வாராந்திர நேரக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. இருப்பினும், இத்தகைய வேலை வாய்ப்புகள் மிக குறைவாகவும் போட்டி நிறைந்ததாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் வேலை செய்வது கல்வி அனுமதியின் நிபந்தனைகளை மீறுவதாகக் கருதப்படும். இதனால், மாணவர் அந்தஸ்தை இழக்க நேரிடும். எதிர்காலத்தில் விசா அல்லது வேலை அனுமதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். படிப்பிற்கு பிந்தைய வேலை அனுமதி (Post-study work permit) அல்லது நிரந்தரக் குடியுரிமை (PR) பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும்.

மாணவர்கள் வேலைக்கு முக்கியத்துவம் அளித்து கல்வியைக் கைவிடுவதைத் தடுக்கவும், கல்வித் தரத்தைப் பேணவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, கனடாவிற்கு அதிக அளவில் செல்லும் இந்திய மாணவர்களுக்கு, உயர்ந்து வரும் வாழ்க்கை செலவுகளை சமாளிக்க இந்த பகுதிநேர வேலை மிக அவசியமான ஒன்றாக உள்ளது.