அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தொடர்ந்து வெளியிட்டு வரும் கருத்துகள், உலக நாடுகளுக்கு மட்டுமல்லாமல் கனடாவிற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை கிரீன்லாந்தில் பிறந்த பிரபல பழங்குடியின வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான ஆஜு பீட்டர் வெளியிட்டுள்ளார். டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற முயற்சித்தால், அதற்கடுத்ததாக கனடாவே அவரது இலக்காக மாறும் அபாயம் உள்ளது என்றும், இதனை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் டிரம்பின் கிரீன்லாந்து தொடர்பான கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், ஆனால் தற்போது அவர் மேற்கொள்ளக்கூடிய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் உண்மையான ஆபத்தாக உருவெடுத்து வருவதாகவும் ஆஜு பீட்டர் கூறியுள்ளார்.
“கிரீன்லாந்து மக்கள் மற்றும் அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அமெரிக்காவின் ஒரு பகுதியாக சேர விரும்பவில்லை என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர். அவர்களின் குரலை உலக நாடுகள் கேட்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார். கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில், கிரீன்லாந்தில் வாழும் 85 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிரீன்லாந்து, டென்மார்க் அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி பிரதேசமாக இருந்தாலும், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் டென்மார்க் பொறுப்பேற்கிறது. அதே சமயம், கிரீன்லாந்து நேட்டோ (NATO) அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளது.
இந்த சூழலில், பொருளாதார அல்லது இராணுவ அழுத்தங்கள் மூலம் கிரீன்லாந்தை கட்டுப்படுத்தும் எந்த முயற்சியும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கும் சட்டங்களுக்கும் முற்றிலும் எதிரானது என ஆஜு பீட்டர் தெரிவித்துள்ளார்.
“இன்று கிரீன்லாந்து என்றால், நாளை அது கனடாவாக இருக்கலாம். எனவே, ஜனநாயகத்தை மதிக்கும் உலக நாடுகள் அனைத்தும் கிரீன்லாந்துக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.




