Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் வெளிநாட்டு அரசியல் நடவடிக்கைகள் உலகளவில் புதிய கவலைகளை உருவாக்கி வருகின்றன. வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்ததாக வெளியான தகவல்களும், கிரீன்லாந்தை கைப்பற்றும் நோக்கம் குறித்த அவரது கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Tamil Business Directory

இதனுடன், கொலம்பியா ஜனாதிபதி விவகாரம் மற்றும் மெக்சிகோ போதைக்கும்பல்கள் தொடர்பாகவும் அமெரிக்கா தலையிடப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளமை, பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சூழலில், ஏற்கனவே கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக ட்ரம்ப் முன்பு கூறியிருந்த நிலையில், கனடாவுக்கும் அமெரிக்காவால் சிக்கல் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான கனடாவின் முன்னாள் தூதர் பாப் ரே (Bob Rae), “அமெரிக்காவின் அழுத்தம் அல்லது ஆக்கிரமிப்பு சிந்தனைகளில் கனடா இல்லை என்று கனேடியர்கள் நினைப்பது தவறான புரிதல்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ட்ரம்ப் நிர்வாகம் கனடாவின் இறையாண்மையை போதிய முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Royal Roads பல்கலைக்கழக பேராசிரியர் ஆடம் கோர்டன் (Adam Gordon) கருத்து தெரிவிக்கையில், “ட்ரம்ப் நிர்வாகம் கனடாவுக்கு எதிராக உண்மையான ராணுவ நடவடிக்கைகளை பரிசீலிக்கக்கூடும் என்பதற்கான சுட்டிக்காட்டுகள் அதிகரித்து வருகின்றன” என தெரிவித்துள்ளார். வெனிசுலா விவகாரத்தில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள், கனடாவிற்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம் என்றும், அதற்காக முன்தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு மாறாக, கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரின் ஆலோசகராக பணியாற்றிய ஜெரால்ட் பட்ஸ் (Gerald Butts), ட்ரம்ப் நிர்வாகம் கனடாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் கொண்டுள்ளதாக தான் நம்பவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால், வர்த்தக பேச்சுவார்த்தைகளில் மேலாதிக்கம் பெறுவதற்காக கனடாவின்மீது அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை அதிகரிக்க அமெரிக்கா முயற்சிக்கலாம் என்றும், அதில் கனேடிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளும் இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கனடா–அமெரிக்க உறவுகளில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.