கனடாவின் சஸ்காச்சுவான் மாகாணத்தில் உள்ள நோர்த் பெட்டில்ஃபோர்ட் பகுதியில், நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அந்த நாய் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூவர் மீது பொலிஸார் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 26, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில், 8வது அவென்யூ நோர்த் பகுதியில் நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பலர் இருந்ததாகக் கூறப்படும் ட்ரக் வண்டி ஒன்று அவரது அருகில் நின்றது. அதிலிருந்தவர்கள் மிரட்டல் விடுத்ததுடன், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அதிர்ஷ்டவசமாக, நாயின் உரிமையாளருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, சந்தேக நபர்கள் வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் கிடைத்தவுடன் விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார், சந்தேகத்திற்குரிய ட்ரக் வண்டி 110வது வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
அங்கிருந்த வீட்டிலிருந்து வெளியே வந்த மூன்று ஆண்களை பொலிஸார் கைது செய்தனர். அதேவேளை, வீட்டிலிருந்து தப்பியோட முயன்ற பெண் ஒருவரும் விரட்டிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் அந்த வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார், அங்கிருந்து இரண்டு துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எவ்வித குற்றச்சாட்டுகளுமின்றி விடுவிக்கப்பட்ட நிலையில், மற்ற மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.