Reading Time: < 1 minute

கடந்த மாதம் தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் கனடா பிரஜை ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, உண்மையான நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதி செய்யப்பட வேண்டும் என கனடா அரசுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

Tamil Business Directory

ஒன்ராறியோ மாகாணத்தின் வின்ட்சர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஹசன் ஹைதர் என்ற ஐந்து குழந்தைகளின் தந்தை, கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி லெபனானின் கானா (Qana) கிராமத்தில் நடைபெற்ற இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கனடா அரசு இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ஒரு கனடா பிரஜையின் மரணத்திற்கு காரணமான அனைத்து தகவல்களையும் பெற முயற்சித்து வருகிறோம்” என கனடா அரசு தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தில் அரசு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Anita Anand தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த சம்பவத்தை இஸ்ரேலே விசாரிக்க வேண்டும் என்ற கனடா அரசின் நிலைப்பாட்டை National Council of Canadian Muslims கடுமையாக எதிர்த்துள்ளது.

“குற்றச்சாட்டுக்குள்ளான தரப்பே தன்னைத் தானே விசாரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹசன் ஹைதர் இயல்பாக இறக்கவில்லை; அவர் கொல்லப்பட்டுள்ளார்” என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த மரணம் தொடர்பாக சுயாதீன மற்றும் நடுநிலையான விசாரணை அவசியம் எனவும், சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை கண்டறிந்து உண்மையான நீதியை நிலைநிறுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

“ஹசன் ஹைதரின் உயிரிழப்புக்குக் காரணமானதாக குற்றம்சாட்டப்படும் தரப்பினரிடமே விசாரணையை ஒப்படைத்தால், உண்மையான நீதி கிடைக்காது” என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.