Reading Time: < 1 minute

நேற்று பிற்பகல் வேளையில் லிபேர்ட்டி விலேஜ் பகுதியில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ரொரன்ரோ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil Business Directory

Strachan Avenueவிற்கு மேற்கே, East Liberty Street மற்றும் Pirandello Street பகுதியில் நேற்று பிற்பகல் 4:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போதிலும், அங்கு காயமடைந்தவர்கள் எவரும் காணப்படவில்லை எனவும், வெற்றுத் தொட்டாக்களும், அருகே இருந்த கட்டிடங்களில் துப்பாக்கிச் சூட்டுத் துளைகளுமே அங்கே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அங்கிருந்து வெள்ளை நிற SUV ரக வாகனம் ஒன்று தப்பிச் சென்றதையும் சிலர் அவதானித்து்ளளனர்.

எனினும் சிறிது நேரத்தில் கட்டிடம் ஒன்றினுள் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்படுவதனை கண்டறிந்த அதிகாரிகள், உயிராபத்தான நிலையில் காணப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுவேளை குறித்த அந்தப் பகுதியில் நேற்று இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இது என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக அதிகாலை 3:30 அளவில் அங்கு துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து சில வாகனங்கள் அங்கு மோதுண்டதாகவும், எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.