Reading Time: < 1 minute

நேற்று முற்பகல் வேளையில் பிரம்டனில் மூவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் 34வயதுப் பெண் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

Queen street மற்றும் Main street பகுதியில் நேற்று முற்பகல் 10:51 அளவில் இந்தக் கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றதனை பீல் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த அந்தப் பகுதியில் உள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றின் மேலே அமைந்துள்ள மாடிக் குடியிருப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்ற நிலையில், அங்கு அதிகாரிகள் விரைந்தபோது பெண் ஒருவர் உயிராபத்தான காயங்களுடனும், ஆண் ஒருவர் பாரதூரமான காயங்களுடனும், மேலும் ஒரு ஆண் ஆபத்து குறைவான காயங்களுடனும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த இந்தச் சம்பவம் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல என்றும், குறிவைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றும், கத்திக் குத்துக்கு இலக்கானவர்களும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரும் ஒருவரை ஒருவர் ஏற்கனவே அறிந்தவர்கள் என்றும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.