Reading Time: < 1 minute

தென்னாப்பிரிக்காவின் Kruger தேசிய பூங்காவிற்கு சுற்றுலா சென்றிருந்த 69 வயதுடைய கனேடியர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முன்னதாக வெளியான தகவல்கள் சரியானவை அல்ல என அவரது நண்பர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

Tamil Business Directory

முன்னதாக வெளியான தகவல்களில், குறித்த கனேடியர் ஒருவர் வழிகாட்டியிடம் இருந்த துப்பாக்கி உண்மையானதா என்று கேட்டதாகவும், அதை விளக்கிக் காட்டும் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்து, அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், உயிரிழந்தவரின் நெருங்கிய நண்பரான Kelvin Choi, இந்த தகவல் தவறானது என தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் துப்பாக்கி குறித்து கேள்வி கேட்டவர் அல்ல என்றும், வேறு இருவர் தான் அந்த வழிகாட்டியிடம் துப்பாக்கி தொடர்பாக கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கனடாவின் Vancouver பகுதியில் வசிக்கும் Choi, தனது நண்பரும் அவர்களது மனைவிகளும் உட்பட 28 பேர் கொண்ட சுற்றுலா குழுவாக தென்னாப்பிரிக்காவிற்கு சென்றிருந்ததாக தெரிவித்துள்ளார். அந்தக் குழுவில் 10 பேர் கனேடியர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த மாலை, சுற்றுலா குழுவினர் Kruger தேசிய பூங்காவில் உள்ள ஒரு திறந்தவெளி உணவு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் தீயைச் சுற்றி அமர்ந்து உணவருந்திய பின்னர், Choiயின் நண்பர் கழிவறை நோக்கிச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர், குழுவினர் தங்கள் வாகனங்களில் ஏறி தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பத் தயாரானபோது, ஒருவரால் குறித்த கனேடியர் தரையில் விழுந்த நிலையில் காணப்பட்டதாக Choi கூறியுள்ளார்.

உடனடியாக அவசர மருத்துவ உதவி அழைக்கப்பட்ட போதிலும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Choiயின் விளக்கத்தின் படி, வழிகாட்டி துப்பாக்கியை கையாளும் போது அது தவறுதலாக வெடித்துள்ளது. அப்போது அருகில் இருந்த அவரது நண்பருக்கு குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், அவர் கீழே விழுந்ததை அப்போது யாரும் கவனிக்கவில்லை என்றும், சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகே அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக 38 வயதுடைய தனியார் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணை தென்னாப்பிரிக்க பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Kruger தேசிய பூங்கா நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, சம்பவத்தில் தொடர்புடைய வழிகாட்டி தேசிய பூங்கா ஊழியர் அல்ல; தனியார் concession நிறுவனத்துடன் இணைந்த வழிகாட்டி என கூறப்பட்டுள்ளது.

இந்த துயரச் சம்பவம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.