2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘Round of 32’ சுற்றில், வியாழக்கிழமை டொராண்டோவில் நடைபெறவுள்ள போர்ச்சுகல் மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டிக்கான டிக்கெட் விலைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளன.
ஜூலை 2, 2026 அன்று டொராண்டோவின் BMO Field மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி, கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், குரோஷியா அணியின் லூகா மோட்ரிசும் நேருக்கு நேர் மோதக்கூடிய முக்கியமான நாக்-அவுட் போட்டியாக இது பார்க்கப்படுகிறது.
மறுவிற்பனை இணையதளங்களில் டிக்கெட் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன. SeatGeek இணையதளத்தில் சில டிக்கெட்டுகள் கனடிய டாலர் மதிப்பில் பல ஆயிரங்களைத் தாண்டி, சில பட்டியல்களில் CA$50,000-க்கும் மேல் காணப்படுகின்றன. குறைந்த விலை டிக்கெட்டுகளும் சாதாரண ரசிகர்களுக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளன.
Reuters தகவலின்படி, இந்த போட்டிக்கான மிகக் குறைந்த விலை மறுவிற்பனை டிக்கெட்டுகளின் சராசரி விலை 3,000 அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. StubHub மற்றும் Vivid போன்ற தளங்களிலும் விலை பெரிதும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. டொராண்டோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போர்ச்சுகல் மற்றும் குரோஷிய வம்சாவளியினர் அதிகளவில் வாழ்வது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ரொனால்டோ மற்றும் மோட்ரிச் ஆகிய இருவருக்கும் இது கடைசி உலகக் கோப்பை ஆக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இந்த போட்டியில் தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பதால், ரசிகர்கள் இதனை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகக் கருதுகின்றனர்.
டொராண்டோவில் உள்ள BMO Field, 2026 உலகக் கோப்பை நடைபெறும் மைதானங்களில் மிகச் சிறிய கொள்ளளவு கொண்ட ஒன்றாகும். சுமார் 43,000 ரசிகர்களுக்கான இருக்கைகள் மட்டுமே உள்ளதால், டிக்கெட்டுகளுக்கான தேவை மேலும் அதிகரித்துள்ளது.
ஒன்ராறியோவில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட “Putting Fans First Act” சட்டத்தின் கீழ், டிக்கெட்டுகளை அசல் விலையை விட அதிகமாக மறுவிற்பனை செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், FIFA தனது அதிகாரப்பூர்வ மறுவிற்பனை தளத்தில் டொராண்டோ போட்டிகளுக்கான resale டிக்கெட்டுகளை தற்காலிகமாக நீக்கியதாக Reuters தெரிவித்துள்ளது.
இருப்பினும், பிற மறுவிற்பனை தளங்களில் டிக்கெட் விலைகள் இன்னும் உயர்ந்தபடியே காணப்படுகின்றன. இதனால், சாதாரண கால்பந்து ரசிகர்களுக்கு உலகக் கோப்பை போட்டியை நேரில் காண்பது மிகப்பெரிய செலவாக மாறியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.