Reading Time: < 1 minute

கனடா வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத “எஸ்.எம்.எஸ் பிளாஸ்டர்” (SMS Blaster) எனும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கானோரை ஏமாற்ற முயன்ற மூன்று பேரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

இந்த விசித்திரமான சைபர் குற்றத்தை விசாரிக்க டொராண்டோ போலீசார் ‘புராஜெக்ட் லைட்ஹவுஸ்’ என்ற சிறப்புத் திட்டத்தைத் ஆரம்பித்தனர்.

2025 நவம்பர் மாதம் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் இந்தச் சட்டவிரோதச் செயல்பாடு குறித்து ஒரு சைபர் பாதுகாப்பு நிறுவனம் போலீசாருக்குத் தகவல் அளித்தது.

அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஒரு மொபைல் டவர் (Cell Tower) போலவே போலியாகச் செயல்படும் கருவி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கருவி ஒரு போலி செல் டவர் போலச் செயல்பட்டு, அருகில் இருக்கும் மொபைல் போன்களின் இணைப்புகளைத் துண்டித்து தன்பக்கம் இழுத்துக் கொள்ளும். பின்னர், அந்த மொபைல்களுக்கு நம்பகமான நிறுவனங்களில் இருந்து வருவது போன்ற போலி குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பும் என குறிப்பிட்டுள்ளனர்.

பார்க்கிங் அபராதம் அல்லது நெடுஞ்சாலைக் கட்டணம் (Hwy 407) செலுத்தக் கோரி வரும் குறுஞ்செய்திகளில் உள்ள லிங்க்குகளைக் கிளிக் செய்தால், அது போலி இணையதளத்திற்கு அழைத்துச் சென்று வங்கி விபரங்களைத் திருடும்.

மொபைல் போன்கள் நிஜமான டவர்களில் இருந்து துண்டிக்கப்பட்டு இந்த போலி கருவியுடன் இணைவதால், அந்தச் சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களால் அவசர உதவிக்கு (911) கூட அழைக்க முடியாத நிலை ஏற்படும்.

இந்தக் கருவி ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்டு டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றிக்கொண்டே இருந்துள்ளது.

சுமார் 1.3 கோடி முறை மொபைல் நெட்வொர்க் இடையூறுகள் பதிவாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான மொபைல்கள் இந்த போலி டவருடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் அஞ்சுகின்றனர்.

கடந்த மாதம் ஹாமில்டன் மற்றும் மார்க்கம் பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மூன்றாவது நபர் சரணடைந்துள்ளார்.

இவர்கள் மீது மோசடி உள்ளிட்ட 44 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக் காரணங்களுக்காக இவர்கள் பயன்படுத்திய கருவியின் உண்மையான புகைப்படம் வெளியிடப்படவில்லை.

இவ்வாறான மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்பாராத விதமாக வரும் எந்தவொரு குறுஞ்செய்தியில் உள்ள லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம்.

பணம் செலுத்தக் கோரி வரும் செய்திகளில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். உங்கள் வங்கி ரகசியங்கள் அல்லது கடவுச்சொற்களை (Passwords) யாரிடமும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன தொழில்நுட்ப மோசடியை முழுமையாகக் முறியடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.