மாண்ட்ரியலில் உள்ள ‘மாமி கிளாபூட்டிஸ்’ (Mamie Clafoutis) என்ற பிரபல பேக்கரியில், பட்டப்பகலில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று புகுந்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் பத்து பேர் கொண்ட அந்த கும்பல், கடையிலிருந்த பொருட்களை பைகளில் அள்ளிக்கொண்டதுடன், “எல்லாம் இலவசம்” மற்றும் “அராஜகம் வாழ்க” என்று முழக்கமிட்டுள்ளனர்.
மேலும், கடையின் ஜன்னல்களில் “இலவச ரொட்டி” என்றும், கடைக்குள் “முதலாளித்துவ கடை” என்றும் வாசகங்களை எழுதிச் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்தச் செயலை ஒரு “அரசியல் போராட்டம்” என்று வர்ணித்துள்ள ஒரு அநாமதேயக் குழு, முதலாளித்துவத்திற்கும் அந்த பேக்கரியில் பயன்படுத்தப்படும் கண்காணிப்புத் தொழில்நுட்பங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இதைச் செய்ததாக இணையதளத்தில் உரிமை கோரியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்குப் பேக்கரியின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“இது சமூகச் செயல்பாடு அல்ல, இது அப்பட்டமான திருட்டு” என்று சாடியுள்ள நிர்வாகம், அதிகாலை 4 மணிக்கே எழுந்து உழைக்கும் தொழிலாளர்களையும் சிறு வணிகங்களையும் இத்தகைய செயல்கள் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளது.
மாண்ட்ரியல் காவல்துறையினர் (SPVM) இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியும் இதே போன்ற பாணியில் மற்றொரு வணிக நிறுவனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தற்போது வரை இச்சம்பவம் தொடர்பாகக் கைது நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.





Comments are closed, but trackbacks and pingbacks are open.