கனடாவின் மாண்ட்ரியலில் உள்ள பெண் நோயாளிகளிடம் மருத்துவ ஒழுக்கவிதிகளை மீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மகப்பேறு மருத்துவர் ராபர்டோ பெர்னாண்டஸ் என்பவருக்கு மூன்று மாத கால பணி இடைநீக்கம் விதித்து கியூபெக் மருத்துவர் சங்கம் (Quebec’s College of Physicians) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட 80 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அறிக்கையில், டாக்டர் பெர்னாண்டஸ் தனது நோயாளிகளைத் தொடர்ச்சியாக அவமதித்ததாகவும், அவர்களின் வலியைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் எட்டுப் பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த சாட்சியத்தில், கருப்பையக சாதனத்தை (IUD) மாற்றச் சென்றபோது, மருத்துவர் எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி மிகவும் கொடூரமான முறையில் நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
“வலி தாங்க முடியாமல் நான் அலறியபோதும், கத்துவதில் பயமில்லை என்று கூறி அவர் தனது பணியைத் தொடர்ந்தார்; சிகிச்சைக்குப் பின் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சென்றார்” என்று அந்தப் பெண் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
இந்தச் சிகிச்சைக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்குக் கடுமையான கருப்பைத் தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மற்றொரு நோயாளி, மருத்துவர் தன்னிடம் மிகவும் ஆக்ரோஷமான தொனியில் பேசியதாகவும், இது போன்ற சிறிய பிரச்சனைகளுக்குத் தன்னிடம் வராமல் பொது மருத்துவரைப் பார்க்குமாறு கூறி அவமதித்ததாகவும் புகாரளித்துள்ளார்.
டாக்டர் பெர்னாண்டஸ் மீண்டும் இது போன்ற தவறுகளைச் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை வாரியம் கருதினாலும், அவர் இடைநீக்க காலத்திற்குப் பிறகு மீண்டும் பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், அவர் நோயாளிகளிடம் மென்மையாக நடந்துகொள்ளவும், தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தவும் இந்த மாதம் முதல் ஆறு மாத கால சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.