Reading Time: < 1 minute

கனடாவின் கல்கரி நகரில் தென் ஆசிய சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட மிரட்டல் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்பான விசாரணையில், காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

45 வயதான ரானா சீமா என்பவர் மீது “மிரட்டல் மூலம் பணம் பறித்தல்” மற்றும் “அச்சுறுத்தல் விடுத்தல்” உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

காவல்துறையினரின் தகவலின்படி, மார்ச் 4 முதல் 22 ஆம் திகதி வரை “தொடர்ச்சியான மற்றும் அதிகரித்து வந்த சம்பவங்கள்” இடம்பெற்றுள்ளன.

இதில் துப்பாக்கிச்சூடு சம்பவம், சொத்து சேதம், மற்றும் கால்கரி நகரத்திற்கு வெளியே உள்ள பல குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகள் ஆகியவை அடங்குகின்றன.

இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரே மிரட்டல் வசூல் முயற்சியுடன் தொடர்புடையவை என விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர், பெரிய தொகை பணத்தையும், சில வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டையும் பெற முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவங்களில் குழந்தைகள் எவரும் ஆபத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தாலும், சம்பவ இடங்களின் தன்மை காரணமாக இந்த அச்சுறுத்தல்களை மிகக் கடுமையாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

2025 ஜனவரி மாதத்திலிருந்து கால்கரி நகரில் மொத்தம் 41 மிரட்டல் வசூல் முயற்சிகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 18 சம்பவங்களில் வீடுகள், வணிக நிலையங்கள் அல்லது வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. எனினும், எந்த சம்பவத்திலும் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவங்கள் குறித்து தகவல் உள்ளவர்கள் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.