Reading Time: < 1 minute

கனடாவில் இந்திய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், அந்நாட்டின் ஜாமீன் (Bail) அமைப்பு குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, “கடுமையற்ற ஜாமீன் கொள்கைதான் இந்த உயிரிழப்புக்கு காரணமா?” என்ற விவாதம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Tamil Business Directory

கடந்த மாதம் 23ஆம் திகதி, மதியம் சுமார் 3.30 மணியளவில், டொராண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் ஷிவாங்க் அவஸ்தி (20) என்ற இந்திய மாணவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்ததாக கனேடிய பொலிசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக, Babatunde Afuwape (23) என்ற நைஜீரியா நாட்டவரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், Babatundeக்கு முன்பே பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தது. 2018ஆம் ஆண்டு, பீட்சா விநியோக பணியில் ஈடுபட்ட ஒருவரை துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடித்ததுடன், அவரை பலமுறை கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளை, துப்பாக்கிச்சூடு, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட பல பயங்கர குற்றச்சாட்டுகள் Babatunde மீது நிலுவையில் உள்ளன.

இவ்வாறு பலமுறை கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதுடன், ஜாமீன் நிபந்தனைகளை மீறியதும், மின்னணு கண்காணிப்பு கருவியை துண்டித்ததும் பதிவாகியிருந்த போதிலும், 2025ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி Babatundeக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதன் பின்னரே, முனைவர் பட்டப்படிப்புக்காக கனடா சென்றிருந்த இந்திய இளைஞர் ஷிவாங்க் அவஸ்தி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம், “Babatunde சமூகத்திற்கு ஆபத்தானவர் அல்ல” என ஜாமீன் வழங்கிய அமைப்பு எடுத்த முடிவு தவறானதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

குற்றம் செய்தவர்களுக்கு சமூகத்துடன் மீண்டும் இணைந்து வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே கனடாவின் ஜாமீன் கொள்கையின் நோக்கமாக இருந்தாலும், இவ்வளவு கடுமையான குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்ட ஒருவருக்கு ஜாமீன் வழங்குவது சரியான முடிவா என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது.

Babatundeக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருந்திருந்தால், ஒரு அப்பாவி இளைஞரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்வி, இன்றைய கனடா சமூகத்தில் தீவிரமாக விவாதிக்கப்படுவது மறுக்க முடியாத உண்மையாகியுள்ளது.