Reading Time: < 1 minute

தென்மராட்சி- எழுதுமட்டுவாழ் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் முகங்களை மறைத்தவாறு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கனடாவில் இருந்து வந்திருந்த பெண் ஒருவரின் 35 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுள்ளனர்.

Tamil Business Directory

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரினால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து வந்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எழதுமட்டுவாழில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அன்றிரவு இரவு முகங்களை துணியால் மறைத்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்களை கடுமையாக தாக்கிவிட்டு நகை, பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரில் உள்ள ஆலயம் ஒன்றின் கட்டுமான வேலைகளுக்காக கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட 10 இலட்சம் ரூபா பணத்தை கடந்த சனிக்கிழமை அவர் வவுனியா சென்று பெற்றுள்ளார். இதனை அறிந்தவர்களே இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.