ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டின் பயணங்களுக்காக, மாகாண அரசு சுமார் 28.9 மில்லியன் டாலர் செலவில் ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு மாகாணத்தில் கடும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட ‘சலஞ்சர் 650’ (Challenger 650) ரக விமானம் வாங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
மாகாணம் முழுவதும் முதல்வர் அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்கள் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரிகள் விதிப்புக்கு எதிராக வாதிட அமெரிக்காவிற்கு அடிக்கடி செல்ல வேண்டிய தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விமானம் வாங்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கியூபெக் மாகாணம் பயன்படுத்தப்பட்ட மற்றும் புதிய சலஞ்சர் விமானங்களுக்காக 107 மில்லியன் டொலர் செலவிட்டதையும், கனடா அரசு ஆறு புதிய குளோபல் ஜெட் விமானங்களுக்காக 753 மில்லியன் டொலர் செலவிட்டதையும் ஒப்பிட்டு, இந்த கொள்முதல் மிகவும் சிக்கனமானது என்று முதல்வர் அலுவலகம் நியாயப்படுத்தியுள்ளது.
எனினும், இந்த விமானம் ஜூலை இறுதி வரை பயன்பாட்டிற்கு வராது என்றும் தெரியவந்துள்ளது.
ஒண்டாரியோ மாகாணத்தில் மக்கள் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வால் அவதிப்பட்டு வரும் வேளையில், முதல்வர் தனக்காக சொகுசு விமானம் வாங்குவது தவறான செய்தியை அனுப்பும் என எதிர்க்கட்சியான NDP-யின் தலைவர் மாரிட் ஸ்டைல்ஸ் தெரிவித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.