கனடா ஒரு வட அமெரிக்க நாடு! உலக வரைபடத்தைப் பார்த்தாலே, கனடாவும் அமெரிக்காவும் வெறும் ஒரு எல்லைக்கோட்டினால் பிரிக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரியும்.
அப்படியிருக்கும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொடுத்துவரும் தொல்லையால், பேசாமல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துவிடலாமா என்னும் எண்ணம் கனடாவுக்கு உருவாகிவருவதுபோல் தெரிகிறது.
குறிப்பாக, மார்க் கார்னி கனடாவின் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்தே, அதுவும், ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்ட, கூடுதலாக வரிகளை விதிக்க, அமெரிக்காவை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாய்ந்துவருகிறது கனடா.
’ஐரோப்பா அல்லாத நாடுகளில், மிகவும் ஐரோப்பிய நாடாக திகழும் கனடா, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க, முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தையே நோக்கிப்பார்க்கிறது’ என்று கடந்த ஜூன் மாதம் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய – கனடா உச்சி மாநாட்டில் பேசினார் கனடா பிரதமரான மார்க் கார்னி.
அந்த தருணத்திலிருந்து, கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ஒரு நிலையான மற்றும் ஆழமான ஒருங்கிணைப்பு உருவாகிவருகிறது.
அதன் பின்னர், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
அத்துடன், இந்த வாரம் இரு தரப்பினரும் தங்கள் தற்போதைய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் மேம்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆக, வட அமெரிக்க நாடான கனடா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைகிறதா, அது சாத்தியமா என்னும் கேள்விகள் எழுந்துள்ளன!
நிபுணர்களிடம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் கனடா இணைவது குறித்து விவாதித்தால், அது சாத்தியமே என்கிறார்கள் அவர்கள்!
கனடா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தால், அது கனடாவின் அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்யாது, மாறாக, உலகின் மீதான கனடாவின் தாக்கத்தை அது அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார் வரலாறு மற்றும் பொருளாதார நிபுணரான Augusto Lopez Claros என்பவர்.
கடந்த கோடையில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான கூட்டாண்மையை விரும்புவதாகவும், ஆனால் அதில் உறுப்பினராக விரும்பவில்லை என்றும் கார்னி கூறினார். ஆனால், பாதிக்கும் சற்று குறைவான கனேடியர்கள், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் இந்த யோசனையை ஆதரிப்பதாக Abacus Data என்னும் ஆய்வமைப்பு தெரிவிக்கிறது.
Abacus Data அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான David Coletto, கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பில் ஒரு கேள்வி எழுமானால், ஏற்கனவே அமெரிக்கா தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக கனேடியர்கள் கருதும் நிலையில், அவர்களில் பலர் அதற்கு ஆதரவளிப்பார்கள் என தான் நம்புவதாக தெரிவிக்கிறார்.
அதே நேரத்தில், அப்படி கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையுமானால், கனடா தனது இறையாண்மையை தியாகம் செய்ய நேரிடும் என்கிறார் வர்த்தகத்துறை நிபுணரான Meredith Lilly என்பவர்.
அப்படி கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும்போது, கனடாவின் வர்த்தக் கொள்கைகள் தொடர்பில் முடிவுகள் எடுப்பது ஐரோப்பிய நாடாளுமன்றமாகத்தான் இருக்குமேயொழிய கனடாவாக இருக்காது என்கிறார் அவர்.
ஆக, கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை விடவும், ஜேர்மனி, முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரித்தானியா, ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும்.
அந்த நாடுகளின் கூட்டமைப்பு, அமெரிக்கா போன்ற தொல்லை கொடுக்கும் நாடுகளை எதிர்த்து நிற்கவேண்டும் என்கிறார் கனடா அமெரிக்க உறவுகள் நிபுணர்கள் குழுவின் தலைவரான Fen Osler Hampson என்பவர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.