Reading Time: < 1 minute

எபோலா வைரஸ் பரவல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக எல்லை மற்றும் குடிவரவு கட்டுப்பாடுகளை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

Tamil Business Directory

கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிக்கும் நபர்களுக்கான குறிப்பிட்ட குடிவரவு ஆவணங்களை 90 நாட்களுக்கு இடைநிறுத்த கனடா அரசு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை மே 27, 2026 இரவு 11:59 மணி முதல் அமலுக்கு வரும் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக குடியிருப்பு விசா, eTA அல்லது நிரந்தர வதிவிட விசா வைத்திருப்பவர்களும், இந்த இடைநிறுத்த காலத்தில் கனடாவுக்குப் பயணம் செய்ய முடியாது. அதேவேளை, இந்த நாடுகளில் வசிப்பவர்களின் புதிய விண்ணப்பங்கள் தொடர்பான இறுதி முடிவுகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 30, 2026 இரவு 11:59 மணி முதல் ஆகஸ்ட் 29, 2026 வரை, கடந்த 21 நாட்களில் இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த கனடியப் பிரஜைகள், நிரந்தர வதிவிட உரிமையாளர், Indian Act கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் சில வெளிநாட்டவர்கள் கனடாவிற்கு வரும்போது அறிகுறிகள் இல்லாவிட்டாலும் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்டுள்ள எபோலா பரவல் மற்றும் உகண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் அதிகரிக்கும் அபாயம் காரணமாகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, கொங்கோவில் ‘Bundibugyo’ வகை எபோலா பரவலின் அபாய நிலையை “மிகவும் அதிகம்” என மதிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவும் இதற்கு முன்பு, கடந்த 21 நாட்களில் கொங்கோ, உகண்டா அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் இருந்த சில வெளிநாட்டு பிரஜைகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.

கனடா அரசு, நாட்டில் மக்களுக்கு தற்போதைய அபாயம் குறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுவரை கனடாவில் எபோலா நோய் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும், தற்போது வட அமெரிக்காவில் எபோலா நோயாளிகள் எவரும் இல்லை என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.