நிலவைச் சுற்றி மனிதர்களை கொண்டு செல்லும் Artemis II திட்டத்தின் ஒரு பகுதியாக, Orion spacecraft விண்கலம் சமீபத்தில் பூமியிலிருந்து புறப்பட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்த செய்தியாக இருக்கலாம்.
ஆனால், இந்த வரலாற்றுப் பயணத்தில் ஒரு தனித்துவமான அம்சம் உள்ளது. அந்த விண்கலத்தில் கனேடிய விண்வெளி வீரர் Jeremy Hansen உடன், கனடாவுக்குச் சொந்தமான 2,600 தாவர விதைகளும் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த விதைகள் நிலவில் விதைக்கப்படுவதற்காக அல்ல. மாறாக, கனடாவின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் அவசியத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சியாக இவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, கனடாவுக்கே சொந்தமான தாவர இனங்களில் சுமார் 25% அழிவின் விளிம்பில் உள்ளன என்பது கவலைக்குரிய விடயமாகும்.
மேலும், விண்வெளியில் காணப்படும் கதிரியக்க சூழல் விதைகளின் வளர்ச்சிக்கும் மரபணு அமைப்பிற்கும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்வதும் இந்த முயற்சியின் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.
இந்த விண்வெளிப் பயணம் நிறைவடைந்து விதைகள் பூமிக்குத் திரும்பியதும், அவை கனடாவின் பல்வேறு பகுதிகளில் விதைக்கப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் இணைக்கும் ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.




