Reading Time: < 1 minute

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தற்காலிக உடன்படிக்கையொன்று எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உடன்படிக்கை “பயனுள்ளது” என கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

பிரான்சின் ஏவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சிமாநாட்டின் போது, சர்வதேச ஊடகமொன்றிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் பார்வையில் இப்போரினால் பலன் கிடைத்துள்ளதா என நேரடியாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஈரான் அணு ஆயுதத்தை பெற்றுக்கொள்வதை தடுத்து நிறுத்தியதன் மூலம் இந்த மோதல் பயனுள்ளதாக மாறியுள்ளது என நியாயப்படுத்தியுள்ளார்.

ஈரான் உலகிலேயே பயங்கரவாதத்தை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு என தான் எப்போதும் நம்புவதாகக் குறிப்பிட்ட பிரதமர் கார்னி, அணு ஆயுதத்தை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அந்த நாடு தீவிரமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையின் மூலம் ஈரானின் அணு ஆயுதக் கனவு முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல விடயங்கள் சாத்தியமாக வேண்டியுள்ள போதிலும், இந்த உடன்படிக்கையை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த தற்காலிக உடன்படிக்கை அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் இருதரப்பு போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதிக்குள் இறுதி உடன்படிக்கையின் விபரங்கள் குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்த உடன்படிக்கையை “சுமார் ஒன்றரை பக்கங்களைக் கொண்டது” என விவரித்துள்ள போதிலும், அதன் முழு விபரங்கள் இன்னும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.