Reading Time: < 1 minute

கனேடிய மருத்துவத் துறையில் பணியாற்றும் மருத்துவர்களால் இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்களில் பெரும்பாலானவை வெளிச்சத்திற்கு வராமல் மூடிமறைக்கப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

Tamil Business Directory

கனடிய மருத்துவ சங்க இதழின் (CMAJ) செவ்வாய்க்கிழமை (21) அன்று வெளியாகியுள்ள ஆய்வறிக்கையின்படி, மருத்துவர்கள் மீதான பாலியல் புகார்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை பொதுவெளியில் அறிவிக்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது.

85 சதவீதத்தினர் பெண்கள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான 1,400-க்கும் மேற்பட்ட தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மருத்துவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆவர்.

இவ்வளவு தீவிரமான புகார்கள் இருந்தபோதிலும், வெறும் 34 சதவீத வழக்குகள் மட்டுமே பொலிஸாரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பல கனேடிய மருத்துவர்கள் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தங்களது ஒழுங்குமுறை வாரியங்களிடம் மறைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவத் துறை தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும் சுய – ஒழுங்குமுறை (Self-regulation) முறையில் பாரிய குறைபாடுகள் இருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

கியூபெக் மற்றும் ஓன்ராறியோ உள்ளிட்ட மாகாணங்களில் இதற்கெனத் தனியான சட்டங்கள் இருந்தபோதிலும், தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை என ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.