கனடாவில் வீட்டு கடன் (Mortgage) பெற்றுள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடி நிலைமை உருவாகும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 ஆம் ஆண்டில் கனடா முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உரிமையாளர்கள் தங்களின் வீட்டு கடன் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், கோவிட்-19 பெருந்தொற்று ஆரம்ப காலத்தில் காணப்பட்ட வரலாறு காணாத குறைந்த வட்டி விகிதங்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
வீட்டுமனை தரகு நிபுணர்கள் தெரிவிப்பதாவது, 2021 ஆம் ஆண்டில் வீடு வாங்கியவர்களுக்கு இருந்த “நல்ல காலம்” தற்போது முடிவுக்கு வரக்கூடும். அந்த காலகட்டத்தில் வீட்டு கடன்களுக்கு 1.5 முதல் 3 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதங்கள் நிலவியிருந்தன.
ஆனால், தற்போதைய சூழலில் கடன் புதுப்பிக்கும் போது 4 முதல் 4.09 சதவீதம் வரை உயர்ந்த வட்டி விகிதங்களில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, பல குடும்பங்களின் மாதாந்திர தவணை தொகை சுமார் 20 சதவீதம் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
சராசரியாக 5.5 இலட்சம் டாலர் மதிப்புடைய ஒரு வீட்டு கடனுக்கு, மாதத்திற்கு கூடுதலாக சுமார் 550 டாலர் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என கணிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் 6,500 முதல் 6,600 டாலர் வரை கூடுதல் செலவுச் சுமை உருவாகும்.
இந்த மாற்றம், ஏற்கனவே உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளுடன் சேர்ந்து, பல கனேடிய குடும்பங்களின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.




