Reading Time: 2 minutes

மருத்துவமனையில் இரகசிய கமராக்களை பொருத்திய பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

Tamil Business Directory

தமது மருத்துவமனையில் நோயாளிகள் உடைகளை மாற்றும் “மிகவும் ரகசியமான இடங்கள்” உட்பட பல இடங்களில், அவர்களின் அனுமதியின்றி இருபதுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கமராக்களை பொருத்தி தனியுரிமையை மீறிய குற்றச்சாட்டில், டொரண்டோவைச் சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவருக்கே இவ்வாறு 20 மில்லியன் டொலர்களுக்கும் அதிகத் தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மார்பக அறுவை சிகிச்சை, கொழுப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அழகுக்கலை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் “டாக்டர் சிக்ஸ்” என்று அழைக்கப்படும் டாக்டர் மார்ட்டின் ஜூகன்பர்க் என்பவருக்கு எதிராகவே இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர் டொரண்டோவின் பிரபல ‘பேர்மாண்ட் ரோயல் யார்க்’ ஹோட்டலுக்குள் தனது கிளினிக்கை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 7,000 நோயாளிகள் இணைந்து தொடர்ந்த இந்த கூட்டாக தாக்கல் செய்த இந்த வழக்கில், இந்த வாரம் தீர்ப்பளித்த நீதிபதி பால் ஷாபாஸ்), மருத்துவரின் இந்த நடவடிக்கை “கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

அவர் தனது நோயாளிகளின் நலனை விட சொந்த நலனுக்கே முன்னுரிமை அளித்துள்ளார். தனக்குக் கிடைத்த நம்பிக்கையான பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, தன்னிடம் சிகிச்சை பெற வந்த பலவீனமான நோயாளிகளுக்குத் துரோகம் இழைத்துள்ளார் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்பறை, காத்திருக்கும் இடம், நடைபாதைகள், ஊழியர் அறை, ஆலோசனைக் கூடங்கள், பரிசோதனை அறைகள், அறுவை சிகிச்சைக்கூடம் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு அறை என மொத்தம் 24 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

நோயாளிகள் ஆடைகளைக் களைய வேண்டிய பரிசோதனை அறைகளில் கேமராக்கள் இருப்பது குறித்து எந்தவொரு அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும், கிளினிக்கிற்கு வெளியே லிஃப்ட் பகுதியில் மட்டுமே “இப்பகுதி வீடியோ கண்காணிப்புக்கு உட்பட்டது” என்ற பொதுவான அறிவிப்பு இருந்ததாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு கேமராக்களுக்கு நோயாளிகளின் அனுமதி பெறப்படாத நிலையில், மருத்துவரின் சமூக ஊடகப் பக்கங்களை விளம்பரப்படுத்துவதற்காக நோயாளிகளிடம் அனுமதி பெற அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் சில நேரங்களில் அறுவை சிகிச்சை வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதற்காக, நோயாளிகளுக்குத் தீவிர அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது கல்வி நோக்கத்திற்காகச் செய்யப்பட்டது என மருத்துவர் தரப்பில் கூறப்பட்ட போதிலும், இது முற்றிலும் சந்தைப்படுத்தல் நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டது என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கேமராக்கள் பாதுகாப்பிற்காகவே பொருத்தப்பட்டன என்ற மருத்துவரின் வாதத்தை நிராகரித்த நீதிபதி, கேமரா காட்சிகளைத் தனது தனிப்பட்ட ஐபோன் மற்றும் ஐபேட் மூலம் மருத்துவர் கண்காணித்து வந்துள்ளதை உறுதிப்படுத்தினார்.

எனினும், இந்தத் தரவுகள் பாலியல் திருப்திக்காகவோ அல்லது வேறு ஏதேனும் தவறான நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இறுதியாக, நோயாளிகளுக்கு 21,500,000 டொலர்களை இழப்பீடாக வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி, அறுவை சிகிச்சைக்காகச் சென்ற ஒவ்வொருவருக்கும் தலா 5,000 டொலர்களும், இதர ஆலோசனைகளுக்காகச் சென்றவர்களுக்கு தலா 500 டொலர்களும் வழங்கப்படவுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.