கனடாவின் நயாகரா பிராந்தியத்தில் கல்வி கற்றுவந்த இந்திய இளம்பெண் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் இந்திய மற்றும் கனேடிய சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர், இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தின் போர்சாத் பகுதியைச் சேர்ந்த 22 வயதான விதி கல்பேஷ்பாய் மேகானி (Vidhi Kalpeshbhai Meghani) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவில் கல்வி கற்றுவந்ததுடன், பகுதி நேர வேலையும் செய்து வந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நயாகரா பிராந்திய பொலிஸாரின் தகவலின்படி, மே 15, 2026 வெள்ளிக்கிழமை மாலை சுமார் 4:15 மணியளவில், St. Catharines நகரில் Lakeshore Road மற்றும் Lake Street பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். அங்கு ஒரு வயது வந்த பெண் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மேலும் ஒரு ஆண் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், St. Catharines பகுதியைச் சேர்ந்த 40 வயதான Joshua St Omer என்பவர் மே 18, 2026 அன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக Niagara Regional Police Service தெரிவித்துள்ளது. குறித்த நபர் காவலில் வைக்கப்பட்டு, மே 19 அன்று St. Catharines நீதிமன்றத்தில் ஆஜராக திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விதியின் தந்தை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், தனது மகளிடம் ஒருவரால் பணம் கேட்டு மிரட்டப்பட்டதாகவும், மகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது தாக்கப்பட்டதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். எனினும், தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிஸார் இதுவரை அதிகாரப்பூர்வமாக முழுமையான தகவலை வெளியிடவில்லை.
சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்தே குடும்பத்தினருக்கு மகள் உயிரிழந்த செய்தி தெரியவந்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. மகளின் உடலை விரைவில் இந்தியாவிற்கு அனுப்ப கனடா அதிகாரிகள் உதவ வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக தகவல் உள்ளவர்கள் Niagara Regional Police Service-ஐ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், தகவலை பெயர் குறிப்பிடாமல் வழங்க விரும்புவோர் Crime Stoppers வழியாக தகவல் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.