கனடாவில் இளம் வயதினரிடையே இதயச் செயலிழப்பு (Heart Failure) நோய் அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடையே இந்த நோய் கணிசமாக அதிகரித்து வருவது கவலைக்கிடமான நிலையை உருவாக்கியுள்ளது.
23 வயதான ஜென்னி மில்னே என்ற இளம் பெண்ணின் அனுபவம், இந்த நோய் எவ்வளவு அமைதியாக இளைஞர்களை தாக்குகிறது என்பதற்கு முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் ஆஸ்துமா என கருதப்பட்ட நிலையில், பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதய வீக்கம், நுரையீரல் அடைப்பு மற்றும் இதயத் தசை சிதைவு போன்ற கடுமையான பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
முதலில் பித்தப்பை செயலிழப்பு என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவரது உடலில் வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்திருந்ததும், ரத்த வெள்ளை அணுக்கள் அதிகமாக இருந்ததும் மருத்துவர்களை குழப்பமடையச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டதன் மூலம் அவரது உயிர் காப்பாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக வயதானவர்களிடம் மட்டுமே அதிகமாக காணப்பட்ட இதய நோய்கள் தற்போது இளம் தலைமுறையினரிடமும் வேகமாக அதிகரித்து வருவதாக இதய நிபுணர் டாக்டர் மார்கோட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
இளம் வயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோய், அதிகமான மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, துரித உணவுப் பழக்கம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்றவை முக்கிய காரணிகளாக கூறப்படுகின்றன. மேலும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை ஆஸ்துமா அல்லது அலர்ஜி என அலட்சியப்படுத்துவதும் ஆபத்தை அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
2007 முதல் 2016 வரை 20 முதல் 39 வயதினரிடையே இதயச் செயலிழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 5,000-க்கும் அதிகமான கனடியர்கள் புதிதாக இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடல் உழைப்பின் போது அதிகமான மூச்சுத்திணறல், கால்களில் வீக்கம், தீராத சோர்வு போன்ற அறிகுறிகளை இளைஞர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இளம் வயதினருக்கு இதய நோய் வராது என்ற எண்ணத்தை தவிர்த்து, சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக முழுமையான இதய பரிசோதனை மேற்கொள்வது அவசியம் எனவும், ஆரம்ப கட்டத்திலேயே நோய் கண்டறியப்பட்டால் சிகிச்சை மூலம் குணமடையும் வாய்ப்பு அதிகம் எனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.