கனடாவில் ஒரு மனிதனின் இறுதி எச்சங்கள் அடங்கிய அஸ்தி பேழையின் உண்மையான உரிமையாளரைத் தேடி, கடந்த நான்கு வருடங்களாகப் பொலிஸார் நடத்தி வரும் விசித்திரமான தேடல் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கோக்விட்லம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி இந்த பச்சை நிற அஸ்தி பேழை பொதுமகன் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது.
கோக்விட்லம் மற்றும் போர்ட் கோக்விட்லம் எல்லைக்கு அருகிலுள்ள கார்டன் அவென்யூ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த இந்த பேழையை மீட்ட பொலிஸார், அன்று முதல் இன்று வரை அதன் உரிமையாளர்களை தேடி அலைந்து வருகின்றனர்.
அந்தப் பச்சை நிற அஸ்தி பேழையின் மீது ஜேர்மன் மொழியில் சில வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும், அதில் கடந்த 2012 ஆம் ஆண்டு, தனது 25 ஆவது வயதில் உயிரிழந்த ஒரு வாலிபரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த நபருக்கு வழங்கும் மரியாதையின் நிமித்தம் அவரது பெயரை ஊடகங்களுக்கு வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்.
மரணமடைந்த நபரின் குடும்பத்தினரையோ அல்லது நண்பர்களையோ கண்டுபிடித்து, இந்த அஸ்தி பேழையை அவர்களிடம் ஒப்படைக்க எங்களது அதிகாரிகள் தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தினர்.
இந்த பேழையின் பின்னணியை ஆராய்ந்தபோது, இதன் மூலப்பிறப்பிடம் ஜேர்மனி என்பது வரை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது.
ஆனால், துரதிஷ்டவசமாக அதன் உண்மையான உரிமையாளரை இன்னும் எங்களால் நெருங்க முடியவில்லை” என கோக்விட்லம் பொலிஸ் பிரிவின் கார்ப்பரல் ஜான் கிரஹாம் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாகத் தொடரும் இந்த மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு இந்தத் தகவலைக் கொண்டு சேர்ப்பதே தங்களின் “கடைசி நம்பிக்கை” எனப் பொலிஸார் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த அந்த வாலிபரின் ஆன்மாவிற்குச் செய்யும் மரியாதையாக, இந்த அஸ்தி பேழை யாருக்குச் சொந்தமானது அல்லது இது எவ்வாறு இங்கு வந்தது என்பது குறித்த ஏதேனும் சிறு தகவல் தெரிந்திருந்தாலும், உடனடியாக 604-945-1550 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு, தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.