கனடாவின் ஒற்றுமைக்காகப் போராடுவோம் என கல்கரி நகரில் வளர்ந்த கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார்.
கல்கரியில் நடைபெறும் புகழ்பெற்ற ‘ஸ்டாம்பீட்’ திருவிழாவில் கலந்துகொள்வதற்காக பொய்லிவ்ரே அங்கு தங்கியுள்ளார்.
இதன்போது, சனிக்கிழமை இரவு ஹெரிட்டேஜ் பூங்காவில் கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், வரவிருக்கும் அக்டோபர் 19 பொது வாக்கெடுப்பு மற்றும் அல்பர்ட்டா மாகாணப் பிரிவினைவாதம் குறித்து உரையாற்றியுள்ளார்.
நாம் கனடாவின் ஒற்றுமைக்காகப் போராடுவோம் என்று பியர் பொய்லிவ்ரே தெரிவித்தார்.
எதிர்வரும் பொது வாக்கெடுப்பில் அல்பர்ட்டா மக்களின் ஆதரவை நாம் மீண்டும் வென்றெடுப்போம். அச்சுறுத்தல்கள் மூலமாகவோ, விரல் நீட்டி அவர்களுக்குப் பாடம் புகட்டுவதன் மூலமாகவோ அல்லாமல், நம்பிக்கையின் மூலமாகவே இதைச் செய்வோம். விவாதத்தின் இரு தரப்பிலும் உள்ள மக்களின் கருத்துகளுக்கு நாம் மதிப்பளிக்க விரும்புகிறோம் என குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த விவாதத்தில் நியாயமான பல கருத்துக்கள் உள்ளன. நான் எப்போதும் ஒன்றுபட்ட கனடாவிற்காகவே நிற்பேன் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளேன். அதேநேரம், இந்த விவாதத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் நியாயமான கவலைகளைக் கேட்கவும், அவற்றுக்குத் தீர்வுகாணவும் நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். இந்தச் செயல்முறைகள் அனைத்தும் முடிவடையும் போது, நாம் அனைவரும் பொதுவானதொரு நிலத்தின் குடிமக்களாக மீண்டும் முழுமையாக ஒன்றிணைந்து, இந்த நாட்டின் எதிர்காலத்தை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.
அண்மையில் கையெழுத்திடப்பட்ட குழாய்த்தொடர் ஒப்பந்தம் குறித்துப் பேசிய பொய்லிவ்ரே, அல்பர்ட்டாவின் கச்சா எண்ணெய் பசிபிக் பெருங்கடல் பகுதிக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள ‘டாங்கர்’ கப்பல் தடையை நீக்குமாறு பிரதமர் மார்க் கார்னிக்குஅழைப்பு விடுத்தார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.