Reading Time: < 1 minute

கனடா மத்திய வங்கி தனது அடிப்படை வட்டி விகிதத்தை தொடர்ந்து ஐந்தாவது முறையாக 2.25 சதவீதமாகவே நிலைநிறுத்தியுள்ளது.

Tamil Business Directory

பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதோடு, பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு பொருளாதார நிபுணர்கள் பெரும்பாலும் எதிர்பார்த்திருந்த ஒன்றாகும்.

மத்திய வங்கி ஆளுநர் டிஃப் மாக்லம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக உருவாகியுள்ள புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் கனடா பொருளாதாரத்தை பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய கிழக்குப் பிராந்திய மோதலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்துள்ளதன் விளைவாக, கனடாவில் பணவீக்கமும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் ஆண்டு பணவீக்க விகிதம் 2.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் அது சுமார் 3 சதவீதம் வரை நீடித்து, பின்னர் மத்திய வங்கியின் இலக்கான 2 சதவீதம் நோக்கி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட பணவீக்கம் தற்போது பரவலான விலை உயர்வாக மாறியதற்கான ஆதாரங்கள் குறைவாகவே இருப்பதாகவும், இருப்பினும் பணவீக்கம் நீடித்த பிரச்சினையாக மாறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய வங்கி எடுக்கும் என்றும் டிஃப் மாக்லம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதத்தை குறைத்தால் பணவீக்கம் நீடிக்கும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தினால் பொருளாதார வளர்ச்சி மேலும் மந்தமடையக்கூடும் என்ற இரட்டை சவாலை மத்திய வங்கி எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் 0.1 சதவீதம் சுருங்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிலும் பொருளாதாரம் 1.0 சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது.

இரண்டு காலாண்டுகளாக பொருளாதார வீழ்ச்சி பதிவானதால் கனடா மந்தநிலைக்குள் நுழைந்துவிட்டதா என்ற விவாதம் எழுந்தாலும், இந்த வீழ்ச்சி மிகவும் குறைவாக இருப்பதால் அதனை முழுமையான மந்தநிலை என்று கருத முடியாது என பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.