Reading Time: < 1 minute

கனடாவின் நயாகரா பகுதியில், உள்ளூர் கிரவுன் வழக்கறிஞர் (Crown Attorney) அலுவலக பிரதிநிதி என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு மோசடி செய்பவர்கள் தொடர்பான புதிய தொலைபேசி மோசடி பரவி வருவதாக நயாகரா பிராந்திய போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil Business Directory

இதற்கு முன்பு பிற பகுதிகளில் பதிவான இந்த மோசடி தற்போது நயாகரா பகுதி மக்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழைப்பு வரும்போது காட்சி திரையில் (Caller ID) கிரவுன் வழக்கறிஞர் அலுவலகத்தின் உண்மையான தொலைபேசி இலக்கம் தோன்றும் வகையில் மோசடிக்காரர்கள் செயல்படுகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிலர் உண்மையான கிரவுன் வழக்கறிஞர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, தாங்கள் கனடிய மோசடி தவிர்ப்பு நிலையத்துடன் ‘தொடர்புடையவர்கள் என அடையாளப்படுத்துகின்றனர்.

இந்த மோசடியில், அழைப்பைப் பெறும் நபர் அடையாளத் திருட்டு (Identity Theft) சம்பவத்துக்கு இரையாகியுள்ளார் என கூறி, “அரசு அங்கீகரித்த ATM” இயந்திரங்கள் மூலம் பணம் செலுத்துமாறு உத்தரவிடப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவை உண்மையில் Bitcoin இயந்திரங்களாகும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

“இந்த இயந்திரங்களில் பணம் செலுத்தப்பட்டவுடன், அந்த தொகையை மீட்டெடுப்பது மிகவும் கடினம் – சில சமயங்களில் முற்றிலும் சாத்தியமற்றதாகும்,” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரவுன் அலுவலகம் அல்லது கனடிய மோசடி தவிர்ப்பு நிறுவனம் என்பன எந்தவித பணப்பரிவர்த்தனையும் மேற்கொள்ளுமாறு தனிநபர்களை தொடர்புகொள்வது கிடையாது என போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அறியப்படாத அல்லது எதிர்பாராத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல்களைப் பெறும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.