வான்கூவருக்கு தெற்கே அமைந்துள்ள வாஷிங்டன் மாநிலத்தின் பிளெய்ன் பகுதியில், கனடா – அமெரிக்க எல்லைக் கடப்புக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பீஸ் ஆர்ச் பூங்காவிற்கு அருகில், சர்வதேச எல்லைக் கோட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள 4வது தெரு மற்றும் ஏ தெரு சந்திப்பில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
இதில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினருக்குத் தொடர்பு இருப்பதாக பிளெய்ன் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பிளெய்ன் காவல்துறை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
“எஃப்.பி.ஐ அதிகாரிகள் இந்தச் சம்பவம் மற்றும் குற்றப் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வரும் வேளையில், பொதுமக்கள் இப்பகுதியில் தங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பையும் பொறுமையையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஊடகங்களின் அனைத்துக் கேள்விகளும் எஃப்.பி.ஐ அமைப்பிற்கே அனுப்பப்பட வேண்டும்.”
சீட்டிலில் உள்ள எஃப்.பி.ஐ அமைப்பின் செய்தித் தொடர்பாளர், தாங்கள் இந்த விவகாரத்தை ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டாரே தவிர, துப்பாக்கிச்சூடு தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.
இதேபோல், கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனமும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்ததுடன், அனைத்துக் கேள்விகளையும் அமெரிக்க அதிகாரிகளிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு வழிகாட்டியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.