இனி ஒரு நாடோ அல்லது ஒரு சர்வதேச அமைப்போ மட்டும் உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கும் காலம் முடிவடைந்து வருவதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து பயணத்தின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், உருவாகி வரும் புதிய உலக ஒழுங்கில் அமெரிக்கா தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்றும், அதேவேளை கனடா போன்ற நாடுகள் பல்வேறு துறைகளில் புதிய கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிரான்சின் எவியான்-லே-பேன் நகரில் ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறும் ஜி7 உச்சி மாநாடு, புதிய உலக ஒழுங்கிற்கான முக்கிய அடித்தளமாக அமையக்கூடும் என கார்னி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை, குழந்தைகள் இணைய பாதுகாப்பு, உலக பொருளாதார சமநிலை, உக்ரைன் போர், ஈரான் விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் இந்த ஆண்டு ஜி7 மாநாட்டில் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரே மாதிரியான நிரந்தர கூட்டணியை எதிர்பார்ப்பதற்கு பதிலாக, தேவைக்கேற்ப நாடுகள் இணைந்து செயல்படும் “தற்காலிக கூட்டணிகள்” அவசியம் என மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார். கனடா, அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பதில் முக்கியமான மற்றும் நேர்மறையான பங்கை வகிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஈரான் தொடர்பான நிலைமை மற்றும் சர்வதேச பதற்றங்கள் காரணமாக இந்த ஆண்டு ஜி7 மாநாட்டில் புவிசார் அரசியல் விவகாரங்கள் முக்கிய இடம் பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரினை நிறுத்தி உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே சரியான நெறிமுறைத் தீர்வாக இருக்கும் என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.