கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில், வௌவாலுடன் ஏற்பட்ட தொடர்புக்குப் பிறகு 11 வயது சிறுவன் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Canadian Medical Association Journal வெளியிட்ட மருத்துவ அறிக்கையின்படி, 2024 கோடை காலத்தில் வட ஒண்டாரியோவில் உள்ள குடிலொன்றில் குடும்பத்துடன் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தூங்கிக்கொண்டிருந்த சிறுவனின் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியின் மீது வௌவால் ஒன்று அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன் அதை தட்டிவிட்ட பின்னர், அவனது தந்தை வௌவாலைப் பிடித்து வெளியே விட்டுள்ளார்.
அப்போது சிறுவனின் முகத்தில் வெளிப்படையான கடி அல்லது கீறல் எதுவும் தெரியாததால், பெற்றோர் உடனடியாக மருத்துவ உதவியை நாடவில்லை. மேலும், வௌவாலின் நடத்தை அசாதாரணமாகத் தெரியவில்லை என்பதும் அவர்கள் மருத்துவ ஆலோசனை பெறாததற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு சிறுவனின் முகத்தின் வலது பக்கத்தில் உணர்விழப்பு, முள் குத்துவது போன்ற உணர்வு மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றின. ஆரம்பத்தில் இது Bell’s palsy எனப்படும் முக நரம்பு செயலிழப்பு பிரச்சினையாக இருக்கலாம் என கருதப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. பின்னர் வாந்தி, விழுங்குவதில் வலி, பேச்சு குழறல் மற்றும் நரம்பியல் பாதிப்புகள் அதிகரித்ததால் சிறுவன் McMaster Children’s Hospital-இன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.
மருத்துவ பரிசோதனைகளில் ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிறுவனின் உடல்நிலை மோசமடைந்து இறுதியில் அவர் உயிரிழந்தார். ரேபிஸ் அறிகுறிகள் தோன்றிய பிறகு, அது பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தானதாக மாறும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கனடாவில் மனிதர்களுக்கு ரேபிஸ் தொற்று மிகவும் அரிதானதாக இருந்தாலும், 1924 முதல் இதுவரை 28 மனித ரேபிஸ் மரணங்கள் பதிவாகியுள்ளன. சமீப காலங்களில் கனடாவில் மனிதர்களுக்கு ஏற்பட்ட ரேபிஸ் தொற்றுகள் பெரும்பாலும் வௌவால் தொடர்புடன் சம்பந்தப்பட்டவை என Public Health Agency of Canada தெரிவித்துள்ளது.
சுகாதார அதிகாரிகள், வௌவால் தோலைத் தொடுதல் கூட ஆபத்தானதாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர். வௌவால்களின் பற்கள் மிகவும் சிறியதாக இருப்பதால், கடி அல்லது கீறல் கண்களுக்கு தெரியாமல் போகலாம். வௌவால் உடலில் தொட்டாலோ, வீட்டுக்குள் வௌவால் கண்டாலோ உடனடியாக சுகாதார நிபுணர் அல்லது உள்ளூர் public health unit-ஐ தொடர்புகொள்ள வேண்டும்.
ரேபிஸ் தொற்றைத் தடுப்பதற்கான post-exposure prophylaxis எனப்படும் தடுப்பு சிகிச்சை, அறிகுறிகள் தோன்றுவதற்கு முன் உடனடியாக வழங்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக ரேபிஸ் தடுப்பூசி தொடர் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்படும் என கனடா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
வௌவால் அல்லது காட்டு விலங்குகளுடன் நேரடித் தொடர்பு ஏற்பட்டால், காயம் தெரியவில்லை என்றாலும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.