கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் திங்கள்கிழமை மதியம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் அவசரப் பிரிவினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை மதியம் 3:20 மணியளவில் விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் ஹைவே 401 பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதற்கு அருகாமையில் உள்ள விக்டோரியா பார்க் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் மற்றொரு நபர் காயங்களுடன் கண்டறியப்பட்டார்.
அவர் எந்த மாதிரியான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்ற விபரம் இன்னும் அறியப்படாத நிலையில், அவசர சிகிச்சைக்காக அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஜூலை 6 அன்று ஷெப்பர்ட் மற்றும் விக்டோரியா பார்க் அவென்யூ பகுதியில் உள்ள வங்கி கிளை ஒன்றின் வெளிப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டார்களா என்பதை காவல்துறையினரால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
எனினும், இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் காவல் அதிகாரி ஜொனாதன் ரோஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்த காவல் அதிகாரி ஜொனாதன் ரோஸ், இச்சம்பவம் குறித்த புதிய விபரங்களை வெளியிட்டார்.
இந்தக் குற்றச்செயல் தொடர்பான விசாரணைக்குத் தேவையான அனைத்து வளங்களையும் நாங்கள் முழுமையாகப் பயன்படுத்தி வருகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, இந்த ஆண்டில் டொராண்டோவில் பதிவான 17-ஆவது கொலைச் சம்பவமாகப் பதிவாகியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.