Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள ஃபிண்ட்லே கிரீக் பகுதியில், 7 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இவர்களைக் கொலை செய்த அவர்களது தந்தை, பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஒட்டாவா காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

மண்டேவில்லா கிரசென்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு, கடந்த ஜூன் 29, திங்கட்கிழமை காலை 10 மணியளவில் உறவினர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க காவல்துறையினர் வழமையான சோதனைக்காகச் சென்றுள்ளனர்.

அப்போது வீட்டிற்குள் இரு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

விசாரணையில், அந்தச் சிறுவர்களின் தாய் மற்றும் தந்தை விவாகரத்து பெற்றவர்கள் என்பதும், சிறுவர்கள் இருவரும் தந்தையின் வீட்டில் தங்கியிருந்தபோது இந்தத் துயரம் நடந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

சிறுவர்களைக் கொலை செய்த தந்தை, சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி, ஒட்டாவாவில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலை 416 அருகேயுள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் காரில் தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திங்கட்கிழமை காலை எரிந்த நிலையில் இருந்த காரில் இருந்து அவரது சடலத்தைக் காவல்துறையினர் மீட்டனர்.

அத்துடன், அன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் ‘இரோகுவாஸ்’ பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்கும் இந்தத் தந்தைக்குத் தொடர்பு இருக்கலாம் என ஒட்டாவா மற்றும் ஒன்ராறியோ மாகாணக் காவல்துறையினர் இணைந்து விசாரித்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.