கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் சேவை தாமதங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று வரி செலுத்துவோர் குறைதீர்ப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
குறிப்பாக, சிக்கலான ‘T1 திருத்தக் கோரிக்கைகளை’ பரிசீலிப்பதில் ஏற்படும் நீண்ட தாமதங்கள் குறித்து இந்த விசாரணையில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக வரி செலுத்துவோர் குறைதீர்ப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
T1 திருத்தக் கோரிக்கைகளைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து எங்களுக்குத் தொடர்ந்து அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவித்துள்ளது.
கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் சொந்த அறிக்கைகளின்படியே, வரி செலுத்துவோர் கடுமையான கால தாமதங்களை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது.
கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் தற்போதைய சேவை விதிமுறைகளின்படி, சிக்கலான கோரிக்கைகளை அதிகபட்சமாக 20 வாரங்களுக்குள் முடித்திருக்க வேண்டும். ஆனால், மே 14, 2026 நிலவரப்படி, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்நிறுவனம் 47 வாரங்கள் வரை எடுத்துக் கொள்கிறது என சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு நேர்மாறாக, சிக்கலற்ற சாதாரண கோரிக்கைகளுக்கான மறுமதிப்பீட்டு அறிவிப்பு அல்லது விளக்கக் கடிதம் பொதுவாக இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்பட்டு விடுகிறது.
அதேபோல, தொலைபேசி அல்லது அஞ்சல் வழி கோரிக்கைகளுக்கு வழக்கமாக எட்டு வாரங்கள் வரை செலவிடப்படுகின்றது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த விசாரணையின் மூலம், கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் தற்போதைய நடைமுறைகள் மற்றும் இந்தச் சேவை தாமதங்களுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்பதைக் கண்டறிந்து தீர்வு காண முயல்வோம் என குறைதீர்ப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.