Reading Time: < 1 minute

சொந்த வாழ்க்கையில் அடுத்தடுத்து நேர்ந்த பேரிழப்புகளையும் துயரங்களையும் தாங்கிக்கொண்டு, தங்களைப் போன்ற பிற குடும்பங்களுக்கு அந்த நிலை வரக்கூடாது என்பதற்காக ஒன்ராறியோவைச் சேர்ந்த வயோதிப தம்பதியினர் செய்துள்ள பல மில்லியன் டாலர் நன்கொடை நெஞ்சை நெகிழவைத்துள்ளது.

Tamil Business Directory

கனடாவின் ஒக்வில் பகுதியைச் சேர்ந்த பிராங்க் மற்றும் ஜெனிஸ் லோக்லான் ஆகிய தம்பதியினரே இந்த உன்னத செயலைச் செய்து உலகளவில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.

ஜெனிஸின் தாயார், பாட்டி என அவரது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாகப் பலரும் ‘ஹண்டிங்டன்’ எனப்படும் மூளை நரம்பியல் பாதிப்பால் அவதிப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்த நோய் மூளையின் நரம்புச் செல்களைப் படிப்படியாகச் சிதைத்து, கடுமையான உடல் மற்றும் மனநலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

அதேபோல், பிராங்க்கின் முதல் மனைவியும் ‘ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா’ என்ற மூளை பாதிப்பால் குணாதிசயங்கள் மாறி, கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவ்வாறு நரம்பியல் நோய்களால் தங்களது அன்பிற்குரியவர்களைப் பறிகொடுத்து, சொல்லொணாத் துயரத்தை இந்தத் தம்பதியினர் அனுபவித்துள்ளனர்.

நாங்கள் பயங்கரமான இழப்புகளைச் சந்தித்துள்ளோம். ஆனால், அவற்றிலிருந்து மீண்டு வந்து இப்போது பிறருக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்தபோதுதான், இந்தத் தொகையைத் திரும்பக் கொடுக்க முடிவு செய்தோம் என ஜெனிஸ் தெரிவிக்கிக்கின்றார்.

லண்டனில் உள்ள வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்திற்கு இந்தத் தம்பதியினர் 4.1 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் பங்களிப்பையும் சேர்த்து மொத்தம் 8 மில்லியன் டொலர் நிதியத்துடன் புதிய ஆராய்ச்சிப் பிரிவு இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

அல்சைமர் மற்றும் ஹண்டிங்டன் போன்ற மூளை நரம்பியல் நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து, கண்காணிப்பதற்கான அதிநவீன இமேஜிங் (Imaging) தொழில்நுட்பங்கள் மேம்படுத்த இந்த ஆய்வு உதவும் என தெரிவிக்கப்புடுகின்றது.

மருத்துவத் துறையின் முன்னணி ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கவும், இளம் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயிற்சியளிக்க ‘லோக்லான் போஸ்ட்டாக்டோரல் பெல்லோஷிப்’ நிதிக்கு 100,000 டொலர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சிகளின் மூலம் மூளை நரம்பியல் நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைத் தரம் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் தங்களது மறைவிற்குப் பிறகு உயில் மூலமாகச் சிறிய தொகையை வழங்கவே இந்தத் தம்பதி திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், தற்போதைய மருத்துவ ஆராய்ச்சி வேகமெடுத்து வருவதால், இப்போதே பெரிய தொகையை வழங்க முடிவு செய்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.