கனடாவின் சாஸ்கடூன் நகரில் உள்ள ஜிம் பாட்டிசன் குழந்தைகள் மருத்துவமனையில், பிரசவ கால சிக்கல் காரணமாக 24 வயதுடைய கர்ப்பிணித் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் ஜாலி வீனி-சதர்லாண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி கடுமையான வலி, மூச்சுத்திணறல் மற்றும் இருமலின் போது இரத்தம் வெளியேறியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் அவருக்கு கர்ப்பகால உயர் இரத்த அழுத்தமான ‘ப்ரீ-எக்லாம்ப்சியா’ பாதிப்பு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் சுமார் 13 மணி நேரம் கண்காணிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் பிரசவ வார்டுக்கு மாற்றப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மருத்துவர்கள் ஆரம்பத்திலேயே எச்சரிக்கை அறிகுறிகளை கவனித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த மரணத்தைத் தடுக்க முடிந்திருக்கலாம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பழங்குடியின பெண்கள் சுகாதாரத் துறையில் தொடர்ந்து புறக்கணிப்பு மற்றும் சமத்துவமின்மையை எதிர்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனையடுத்து, ஜாலியின் குடும்பத்தினரும், பழங்குடி இனங்களின் கூட்டமைப்பான Federation of Sovereign Indigenous Nations அமைப்பும், இந்த மரணம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த துயர சம்பவத்திற்கிடையே, ஜாலி பெற்றெடுத்த பெண் குழந்தை பாதுகாப்பாக உயிர் பிழைத்துள்ளது.
குழந்தையின் தந்தை பிளெய்ன் மோரின், தனது மனைவியின் நினைவாக மகளை அன்போடு வளர்ப்பேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஜாலி அடுத்த மாதம் சமூகப் பணித்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெறவிருந்த நிலையில், அவரது திடீர் மரணம் குடும்பத்தினரையும் சமூகத்தினரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், சாஸ்காட்செவன் சுகாதார வாரியம் இந்த மரணம் குறித்து இரங்கல் தெரிவித்ததுடன், இதனை “முக்கியமான சம்பவம்” எனக் கருதி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.