Reading Time: < 1 minute

கனடாவில் நச்சு இரசாயனங்களை இணையதளம் வாயிலாக விற்பனை செய்து பலரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் 60 வயதான கென்னத் லா (Kenneth Law), தனது மீதான குற்றச்சாட்டுகளில் பலவற்றை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil Business Directory

ஒன்டாரியோவைச் சேர்ந்த முன்னாள் சமையல்காரரான கென்னத் லா, உயிர் மாய்ப்பு தொடர்பான ஆன்லைன் கலந்துரையாடல் தளங்கள் மூலம் தொடர்பு கொண்ட உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த நபர்களுக்கு சுமார் 1,200 நச்சு இரசாயனப் பொதிகளை அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு பொதிகள் பிரிட்டனுக்கும் அனுப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை ஒன்டாரியோ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, அரசுத் தரப்புடன் ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தின் அடிப்படையில் கென்னத் லா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கனடாவில் உயிர் மாய்ப்பு செய்துகொண்ட சில நபர்களின் மரணங்களுடன் தொடர்புடைய கடுமையான கொலைக் குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பால் வாபஸ் பெறப்பட்டன.

இந்நிலையில், கென்னத் லா வழங்கிய நச்சுப் பொருட்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட பிரிட்டனில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 79 உயிரிழப்புகள் தொடர்பாக அவர் மீது தனியாக வழக்குத் தொடரப்படாதது, அந்நாட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரிட்டனின் அரசு வழக்கறிஞர் திணைக்களம் வெளியிட்ட விளக்கத்தில், கனடாவில் வழங்கப்படும் தண்டனையின் போது பிரிட்டனில் உயிரிழந்தவர்களின் விவகாரங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதாலேயே இந்த அணுகுமுறை தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கென்னத் லாவை பிரிட்டனுக்கு நாடுகடத்த முயன்றால் நீண்டகால சட்டப் போராட்டங்கள் உருவாகக்கூடும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு உயிரிழந்த ஆஷ்டின் என்ற இளைஞரின் தாயார் கிம் புரோசர், “யாராவது ஒருவர் சிறையில் இருப்பதால் என் மகனை இழந்த வலி குறையாது” என வேதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், 2021 ஆம் ஆண்டு கென்னத் லாவிடமிருந்து நச்சுப் பொருளைப் பெற்று உயிரிழந்ததாகக் கூறப்படும் தாமஸின் தந்தை டேவிட் பார்ஃபெட், “கென்னத் லா குற்றத்தை ஒப்புக்கொண்டது வரவேற்கத்தக்கது. ஆனால், என் மகனின் மரணத்திற்காக அவர் பிரிட்டன் நீதிமன்றத்திலும் பதிலளித்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற தடுக்கக்கூடிய உயிரிழப்புகளைத் தடுக்க பிரிட்டன் அரசு பொது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், ரகசிய புலனாய்வின் போது வாடிக்கையாளர் போல தொடர்புகொண்ட ஊடகவியலாளரிடம், தனது தயாரிப்புகளை பயன்படுத்தி “மரணத்தை உறுதி செய்வது எப்படி” என்பது குறித்து கென்னத் லா ஆலோசனைகள் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கனடா, பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட சுமார் 12 நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் இணைந்து விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, 2023 மே மாதத்தில் கென்னத் லா கைது செய்யப்பட்டார்.

கனடா சட்டத்தின்படி, உயிர் மாய்ப்புக்கு தூண்டுதல் அல்லது உதவி செய்த குற்றத்திற்காக அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.