Reading Time: < 1 minute

கனடாவின் மார்க்கம் நகரில் நபர் ஒருவரைக் கடத்த திட்டமிட்டமை தொடர்பாக டொராண்டோவைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

கடந்த மே 21ம் திகதி, மார்க்கம் பகுதியில் உள்ள மேசிஃபீல்ட் கேட் மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ சந்திப்பிற்கு அருகில் அமைந்த வணிக வளாக வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில், மர்ம நபர் ஒருவர் ரகசியமாக டிரேக்கிங் கண்காணிப்பு சாதனம் ஒன்றைப் பொருத்தியுள்ளார்.

இது ஒரு திட்டமிட்ட ஆள் கடத்தல் சதி என்பதை மோப்பம் பிடித்த காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

இதனைத் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள், அடுத்த நாளே கடத்தல்காரர்களின் சந்தேகத்திற்கிடமான வாகனம் மீண்டும் அதே வணிக வளாகப் பகுதிக்கு வந்ததைக் கண்டறிந்து அதனைச் சுற்றி வளைத்தனர்.

அப்போது காரில் இருந்த இரு சந்தேக நபர்கள் தப்பியோட முயன்ற போதிலும், காவல்துறையினர் அவர்களைத் துரத்திச் சென்று அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், இந்தச் சதியில் தொடர்புடைய மூன்றாவது நபர் புதன்கிழமை அன்று காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் டொராண்டோவைச் சேர்ந்த டொனால்ட் ஸ்மித் (30), டென்சின் செகியால் (25) மற்றும் யேஷி டெண்டர் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது குற்றவியல் சதி உட்பட கூட்டாக 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆள் கடத்தல் திட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தும், பாதிக்கப்பட்ட நபர் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.