Reading Time: < 1 minute

கனடாவின் வான்கூவரில், திமிங்கலம் ஒன்றின் மீது ஒருவர் படகைக் கொண்டு மோதிய வித்தியாசமான விபத்தொன்று கமெராவின் கண்களில் சிக்கியுள்ளது.

Tamil Business Directory

வான்கூவரிலுள்ள Stanley Park என்னுமிடத்தினருகில் மூச்சு விடுவதற்காக திமிங்கலம் ஒன்று தண்ணீர் பரப்புக்கு வந்துள்ளது.

அதாவது, spout எனப்படும் இந்த நிகழ்வின்போது, திமிங்கலங்கள் தண்ணீர் பரப்புக்கு அருகில் வந்து மூச்சுக்காற்றை வெளியிடும்போது, தண்ணீர் நீரூற்று போல பீய்ச்சி அடிக்கப்படும்.

ஆக, அந்த திமிங்கலம் மூச்சுக் காற்றை வெளியிடுவதற்காக தண்ணீர் பரப்புக்கு வர, அந்தப் பகுதியில் ஜெட் ஸ்கீ வகை படகில் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

திமிங்கலம் தண்ணீர் பரப்புக்கு வரும் நேரத்தில் சரியாக அந்த நபரின் ஜெட் ஸ்கீ அங்கு வர, ஜெட் ஸ்கீ திமிங்கலத்தின் மீது மோதிவிட்டது.

மோதிய வேகத்தில் ஜெட் ஸ்கீயும் அந்த நபரும் தூக்கி வீசப்படுவதையும், பின்னர் அவர் தண்ணீரில் மிதந்துகொண்டிருப்பதையும் வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

தூக்கி வீசப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், என்றாலும், அவரது நிலைமை சீராக உள்ளதாகவும் பிரிட்டிஷ் கொலம்பியா அவசர மருத்துவ சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், படகு மோதியதில் அந்த திமிங்கலத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய கடல்வளத்துறை அதிகாரிகள் ஒரு குழுவை அனுப்பியுள்ளார்கள்.

அந்தக் குழுவினர் அந்த திமிங்கலத்தை ஆய்வு செய்தபோது, அதற்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதும், அது சாதாரணமாக உணவு உட்கொண்டுவருவதும் தெரியவந்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.