லெபனான் மீது இஸ்ரேல் பெரும் தரைவழி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தெற்கு லெபனானைப் பிடிக்கும் முயற்சிகளை கனடா “கடுமையாகக் கண்டிப்பதாக” அறிவித்துள்ளது. மேலும், லெபனானின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் எந்தவிதத்திலும் மீறப்படக்கூடாது என்றும் கனடா வலியுறுத்தியுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,072 ஆக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்தோர் எண்ணிக்கை 3,000 ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, லெபனானின் தெற்கு எல்லைக்குள் சுமார் 30 கிலோமீட்டர் வரை உள்ள பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டங்களுடன் இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

வாரங்களாக நீடிக்கும் தாக்குதல்கள்; பெரும் இடம்பெயர்வு
லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டிலும் வாரக்கணக்கில் நீடித்து வரும் தாக்குதல்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
தரைவழிப் படையெடுப்பு நெருங்கிவரும் நிலையில், மனிதாபிமான நெருக்கடி தீவிரமடையும் அபாயம் குறித்து பல தரப்பிலிருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
லெபனான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஒற்றுமையை வெளிப்படுத்திய கனடாவின் உலக விவகார அமைச்சகம், இப்போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்டங்களை மதித்து செயல்பட வேண்டும் என்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“பொதுமக்களைப் பாதுகாக்கவும், உள்கட்டமைப்புகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அமைதி காக்கும் படைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படாமல் இருக்கவும் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறோம்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸும் கவலை வெளிப்பாட
செவ்வாய்க்கிழமை, பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், தெற்கு லெபனானை ஆக்கிரமிக்கும் திட்டத்திலிருந்து இஸ்ரேல் விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
மனிதாபிமான ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தரைவழி நடவடிக்கைகளில் இருந்து இஸ்ரேல் விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“லிட்டானி நதி வரை பாதுகாப்பு மண்டலம்”
இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், லிட்டானி நதி வரையிலான பகுதியை இராணுவம் பாதுகாப்பு மண்டலமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை, நதிக்குத் தெற்கே உள்ள தங்கள் வீடுகளுக்கு இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
இதேநேரத்தில், தெற்கு லெபனானை அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலுடன் இணைக்க வேண்டும் என்று சில அரசியல் தலைவர்கள் கருத்து வெளியிட்டிருப்பதும் நிலைமைக்கு கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்கள் தொடர்ச்சி; பலி எண்ணிக்கை உயரும்
சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு நகரங்கள் மற்றும் அகதிகள் முகாம்கள் உள்ளிட்ட பல பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், லெபனானிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் தாக்குதலில் வடக்கு இஸ்ரேலில் ஒரு பெண் உயிரிழந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சமூகம் உடனடி அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.




