Reading Time: < 1 minute

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் (முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ), பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு மற்றும் அண்மைய கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அவரது பெயர் சூட்டப்பட்ட தீவுகளின் பெயர்களை மாற்ற அந்நாட்டு அரசு முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Tamil Business Directory

ஒண்டாரியோவின் செல்வ்யின் (Selwyn) நகராட்சி மன்றம், ‘பிரின்ஸ் ஆண்ட்ரூ தீவு’ (Prince Andrew Island) மற்றும் அதற்கு அருகிலுள்ள ‘கோர்டன்ஸ்டவுன் தீவு’ (Gordonstoun Island) ஆகியவற்றின் பெயர்களை உடனடியாக நீக்க ஒருமனதாக முடிவெடுத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், பொதுப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக (misconduct in public office) எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மீதான “அவப்பெயர்” காரணமாக இந்தப் பெயர்களை மாற்ற வேண்டியது அவசியம் என செல்வ்யின் மேயர் ஷெர்ரி செனிஸ் (Sherry Senis) தெரிவித்துள்ளார்.

ஓட்டோனாபி (Otonabee) ஆற்றில் அமைந்துள்ள இந்தப் பாறைத் தீவுகளுக்கு 1978-இல் ஆண்ட்ரூவின் பெயர் சூட்டப்பட்டது.

அவர் அங்குள்ள லேக்ஃபீல்ட் கல்லூரியில் சில காலம் படித்ததன் நினைவாக இப்பெயர் வழங்கப்பட்டது. புதிய பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, உள்ளூர் பழங்குடி இனமான ‘கர்வ் லேக் ஃபர்ஸ்ட் நேஷன்’ (Curve Lake First Nation) அமைப்பினருடன் ஆலோசிக்கப்படும்.

குடியிருப்பாளர்களின் வாக்கெடுப்பின் மூலம் இறுதிப் பெயர் முடிவு செய்யப்படும். செல்வ்யின் நகராட்சி மட்டுமன்றி, டொராண்டோவிலும் ‘பிரின்ஸ் ஆண்ட்ரூ பிளேஸ்’ என்ற தெருவின் பெயரை மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மிசிசாகா (Mississauga) நகராட்சி ஏற்கனவே ஆண்ட்ரூவுடன் தொடர்புடைய அனைத்து நினைவுப் பலகைகளையும் அகற்ற உத்தரவிட்டுள்ளது.

இது சரியான விடயம் என்று நான் நம்புகிறேன். அந்தப் பெயர்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் கறை, நமது சமூகத்திற்குத் தேவையில்லை,” என மேயர் ஷெர்ரி செனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.