பாடல் வரிகள்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
இப்பாடலின் பொருள், நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!
இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
தமிழிசைக் குறிப்பு :- இப்பாடல் முல்லைப்பாணி எனும் பண்ணில் அமைந்துள்ளது. மூன்றன் நடை தாளத்தில் அமைந்துள்ளது. முல்லைப்பாணி, முல்லத்தீம்பாணி, முல்லையந்தீங்குழல் (முல்லை அம் தீம் குழல்), சிறுமுல்லை, சாதாரி, தாரப்பண், காந்தாரப் பண், ஆசான், ஆசான் திறம் என பல்வேறு பெயர்கள் கொண்டுள்ளது. தமிழிசையின் முதல் பெரும்பண் செம்பாலை எனும் முல்லைப்பண் (அரிகாம்போதி / MixoLydian). இந்த முல்லைப்பண்ணின் திறப்பண் தான் சிறுமுல்லை (மோகனம் / Major Pentatonic). எனவே இது தமிழிசையின் முதல் சிறுபண். முல்லைப்பண், சிறுமுல்லை இரண்டு பண்களையும் தமிழர்கள் மிக உயர்வான இடத்தில் வைத்துக் கொண்டாடினர் எனும் உண்மையை நாம் தமிழ் இலக்கியங்களில் காணலாம்[6]. உலகெங்கிலும் பல நாகரிகங்களிலும், இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பிருந்து இன்றுவரை இந்த சிறுமுல்லைப்பண் மிகவும் புகழ்பெற்று பயன்பாட்டில் உள்ளது[7][8]. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இப்பண்ணைத் தெரிவு செய்தது பாராட்டுக்குரிய செயல். தமிழிசைப் பண்கள் குறித்து இந்தப் பக்கத்தில் பழந்தமிழிசையில் பண்கள் காணலாம்.




