Reading Time: < 1 minute

பிரம்டனில் உள்ள வீடு ஒன்றில் நேற்று பிற்பகல் வேளையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், அந்த விட்டில் இருந்த ஒரு வயது பெண் குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் மூன்று பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

Cottrelle Boulevard மற்றும் Humberwest Parkway பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வெடிப்பு இடம்பெற்றுள்ளதான தகவல் தமக்கு நேற்று பிற்பகல் 1:26 அளவில் கிடைத்ததாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்ட உலங்குவானூர்தி ஒன்று, Herdwick Streetஇல் உள்ள வீடு ஒன்று ஒருபகுதி இடிந்த நிலையில் இருப்பதையும், மேலே இருந்து பார்க்கும் போது வீட்டினுள் இருக்கும் அறைகள் தெரிவதையும் இனங்கண்டுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தை ஒன்று பாரதூரமான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மேலும் மூன்றுபேர் சிறிய எரிகாயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், குறித்த அந்த வீட்டுக்கு இரு மருங்கிலும் இருந்த இரண்டு வீடுகளிலும் இருந்தோர் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றமைக்கான தெளிவான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை எனவும்,அதனைக் கண்டறியவதற்கான ஆய்வுகளும் விசாரணைகளும் தொடர்வதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

வீட்டின் கீழ்த் தளத்திலேயே வெடிப்பு இடம்பெற்றதாக தோன்றுவதாகவும், குறைந்தது இன்னமும் இரண்டு நாட்களுக்கு சம்பவ இடத்தில் விசாரணைகள் தொடரும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.