Reading Time: < 1 minute

புதிய ஆண்டு தொடங்கும் போது, கனடா அரசாங்கம் வழங்கும் நலன்புரி மற்றும் கடன் கொடுப்பனவுகளில் வழக்கமாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, 2026ஆம் ஆண்டில் பணவீக்கம் மற்றும் தொடர்ந்து உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டு, பல முக்கிய நலன்புரி கொடுப்பனவுகள் இரண்டு சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக கனடா வருவாய் முகமை (CRA) அறிவித்துள்ளது. இது 2025ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 2.7 சதவீத உயர்வை விட குறைவானதாகும்.

Tamil Business Directory

நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) அடிப்படையில், இக்கொடுப்பனவுகளுக்கான உச்ச வரம்புகள் மற்றும் வருமானத் தகுதி அளவுகள் ஆண்டுதோறும் சரிசெய்யப்படுகின்றன. CRA வெளியிட்ட தகவலின் படி, 2026ஆம் ஆண்டில் அதிகரிக்கவுள்ள முக்கிய நலன்புரி கொடுப்பனவுகள் வருமாறு:

GST / HST கொடுப்பனவு
குடும்பத்தின் சரிசெய்யப்பட்ட நிகர வருமானம், திருமண நிலை மற்றும் தகுதி பெறும் பிள்ளைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் வரி இல்லாத காலாண்டு கொடுப்பனவாகும். 2026ஆம் ஆண்டில், தனியாக வசிக்கும் நபர்கள் அதிகபட்சமாக $544 வரைவும், 19 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் $187 வரைவும் பெற முடியும்.

கனடா குழந்தை நலக் கொடுப்பனவு (CCB)
18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வளர்க்கும் தகுதியான குடும்பங்களுக்கு வழங்கப்படும் வரி இல்லாத மாதாந்த கொடுப்பனவாகும். 2026ஆம் ஆண்டில், ஆறு வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை கொடுப்பனவு $8,157 ஆகவும், ஆறு முதல் 17 வயது வரையிலான பிள்ளைகளுக்கு $6,883 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.

குழந்தை இயலாமை கொடுப்பனவு (CDB)
கடுமையான மற்றும் நீண்டகால உடல் அல்லது மன இயலாமை கொண்ட 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைப் பராமரிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வரி இல்லாத மாதாந்த கொடுப்பனவாகும். 2026ஆம் ஆண்டில், இதன் அதிகபட்சத் தொகை $3,480 ஆக உயர்த்தப்படவுள்ளது.

கனடா தொழிலாளர் நலன்புரி கொடுப்பனவு (CWB)
குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக வழங்கப்படும் இந்தக் கொடுப்பனவின் கீழ், 2026ஆம் ஆண்டில் பிள்ளைகள் இல்லாத தனிநபர்களுக்கான அதிகபட்சத் தொகை $1,665 ஆகவும், குடும்பங்களுக்கான அதிகபட்சத் தொகை $2,869 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. அதேபோல், இயலாமைக்கான கூடுதல் தொகையும் $860 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக CRA தெரிவித்துள்ளது.