கனடாவில் Air Canada நிறுவனத்தின் முன்னாள் பிரதம விமானி ஒருவர், தேவையான விமான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பல ஆண்டுகள் விமானங்களை இயக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்ராறியோ மாகாணத்தின் Barrie பகுதியைச் சேர்ந்த 59 வயதான Geoffrey Wall என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். Peel பிராந்திய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், 2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை அவர் Air Canada நிறுவனத்தில் பிரதம விமானியாகப் பணியாற்றியதாகவும், அந்த காலப்பகுதியில் 900க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது, அவரிடம் Commercial Pilot Licence இருந்திருந்தாலும், பெரிய வர்த்தக பயணிகள் விமானங்களை பிரதம விமானியாக இயக்குவதற்கு அவசியமான Airline Transport Pilot Licence இல்லை என்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Air Canada நிறுவனம், வழக்கமான ஆவணச் சோதனையின் போது இந்த முரண்பாடு தெரியவந்ததாகவும், உடனடியாக அந்த விமானியை பணியில் இருந்து நீக்கி Transport Canada அதிகாரிகளிடம் தகவல் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், விமானப் பயணிகளின் பாதுகாப்பு பாதிக்கப்படவில்லை என Air Canada விளக்கம் அளித்துள்ளது. அனைத்து விமானிகளும் தொடர்ந்து பயிற்சி, திறன் சோதனை மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், தேவையான உரிமம் இல்லாமல் பல ஆண்டுகள் பிரதம விமானியாகப் பணியாற்றியிருப்பது மிகக் கடுமையான விடயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக Transport Canada அபராதமும் விதித்துள்ளதுடன், விமானப் போக்குவரத்து துறையில் ஆவணச் சரிபார்ப்பு நடைமுறைகள் மீண்டும் கடுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.