Reading Time: < 1 minute

ஹலோவீன் விருந்துபசார நிகழ்வு ஒன்றில் வைத்து 14 வயதுச் சிறுமி ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் 16 மற்றும் 18 வயது பெண்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது இரண்டாம் தர கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்துள்ளனர்.

Tamil Business Directory

வினிப்பெக்கின் Kinver Avenue பகுதியில், கடந்த 26ஆம் திகதி இரவு 10:45 அளவில் இந்தக் கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அங்கு விரைந்ததாகவும், அங்கே 14 வயதுச் சிறுமி ஒருவரும், 18 வயதுப் பெண் ஒருவரும் மோசமான கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், உடனடியாகவே இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் விபரம் வெளியிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சைகள் பலனின்றி 14 வயதுச் சிறுமி உயிரிழந்து விட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் 18 வயதுப் பெண்ணின் நிலை ஓரளவு சீரடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற அந்த வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது கைகலப்பு ஏற்பட்டதாகவும், இதன்போதே இவர்கள் இருவரும் கத்திக் குத்துக்கு இலக்கானதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், கடந்த 28ஆம் திகதி 16 வயதுச் சிறுமி ஒருவர் மற்றும் 18 வயதுப் பெண் ஒருவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதுடன், அவர்கள் மீது இரண்டாம் தர கொலைக் குற்றச்சாட்டு மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டு என்பவற்றைப் பதிவு செய்துள்ளனர்.