விடுமுறை காலத்தில் ரொரன்ரோவில் ஓபியோய்டு பாவனை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ரொரன்ரோ பொது சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் 20 – டிசம்பர் 28 காலத்தில், ஓபியோய்டு அதிகபட்சமாக பயன்படுத்தப்பட்ட சந்தேகங்களுக்காக ரொரன்ரோ அவசர மருத்துவ சேவைகள் 122 அழைப்புக்களுக்கு பதிலளித்துள்ளன. இது கடந்த இரண்டு ஆண்டுகளின் இதே காலப்பகுதியை ஒப்பிடுகையில் 35% அதிகரிப்பு ஆகும். ஆனால், இந்த அதிகரிப்பு உயிரிழப்புகளில் உயர்விற்கு வழிவகுக்கவில்லை; அந்த காலப்பகுதியில் ஐந்துக்கும் குறைவான உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
சட்டவிரோத போதைப்பொருள் கலப்புகள் குறித்து கவலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரொரன்ரோ போதைப்பொருள் பரிசோதனை சேவையின் அறிக்கையின் படி:
fentanyl மாதிரிகளில் para-fluorofentanyl அதிக அளவில் கலந்துள்ளது
பரிசோதிக்கப்பட்ட fentanyl மாதிரிகளில் 81%-இல் medetomidine (கால்நடை மயக்க மருந்து) உள்ளதை கண்டறிந்துள்ளனர்
இதனால் அளவுக்கதிக பாவனை அபாயம் அதிகரித்து, மருத்துவ சிகிச்சை சிக்கலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொரன்ரோ பொது சுகாதாரப் பிரிவு போதைப்பொருள் பயனர்களை, தனியாக போதைப்பொருள் பயன்படுத்தாமல், தங்களின் ஆபத்தைக் குறைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ஊக்குவிக்கிறது.




