பிராம்டனில் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 8ஆம் திகதி மாலை 7 மணியளவில், ஸ்டீல்ஸ் அவென்யூ மற்றும் ஹுரொண்டாரியோ வீதிக்கு அருகிலுள்ள பிளாசா ஒன்றில் இருந்து தனது வாகனத்தில் இறங்கிய 25 வயதுடைய நபரை சந்தேகநபர்கள் அணுகி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில், மூன்று சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் புதன்கிழமை அறிவித்தனர்.
ரொரன்ரோவைச் சேர்ந்த 25 வயதான உமர் அயா (Omar Ayah), மற்றும் பிராம்டனைச் சேர்ந்த 20 வயதான மாலிக் யங் (Malik Young), எலிஜா டேர்னி (Elijah Turney) ஆகியோர் மீது முதல்நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்டதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனவும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்குடன் தொடர்பாக வேறு சந்தேகநபர்கள் எவரும் தேடப்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.




